ஓபன் ஏஐ நிறுவனத்தின் விடியோ உருவாக்கும் செய்யறிவு செயலி இந்தாண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா முராட்டி தெரிவித்துள்ளார்.
எழுத்து மூலமாக தருகிற உள்ளீட்டை விடியோவாக மாற்றக் கூடிய ‘சோரா ஏஐ’ என்கிற செயலியை ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் அறிமுகப்படுத்தியது முதல் அதன் மீதான ஆர்வம் தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே உருவானது.
சாம் ஆல்ட்மேன் தொடங்கும்போது பயனர்களை அவர்களின் உள்ளீடுகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அவற்றை 60 நொடி விடியோவாக சோரா உருவாக்கியது தொழில்நுட்ப உலகில் மிகப்பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது.
தற்போது தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், இயக்குநர்களுக்கு மட்டுமே சோரா பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா பேசும்போது, சோராவை இன்னும் மெருகேற்றி விடியோ உடன் ஆடியோவையும் தருகிற வகையில் உயர்த்தவுள்ளோம். எதார்த்த அனுபவம் இதன் மூலம் கிடைக்கக் கூடும் எனத் தெரிவித்தார்.
அதே வேளையில் ஓபன் ஏஐ தனியுரிமை மற்றும் நெறிமுறைகளுக்கு மதிப்பளிப்பதாகவும் பொது பிரபலங்கள் குறித்த விடியோக்களை உருவாக்காது என்றும் இதன் விடியோக்களில் அது ஏஐ உருவாக்கியது என்பதைக் காட்ட வாட்டர்மார்க் பதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.