வெளிநாட்டு நாணயங்களில் பரிவர்த்தனை: போர்ட் சிட்டி நிர்வாகத்தின் வலியுறுத்தல்

0
243

வெளிநாட்டு நாணயங்களில் பரிவர்த்தனை செய்ய முதலீட்டாளர்களை அனுமதிக்கும் வரைவு வங்கி மற்றும் நிதிச் சேவை விதிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகர நிர்வாகம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களாக, போர்ட் சிட்டிக்குள் வர்த்தகம் செய்வதற்கு முதலீட்டாளர்கள், பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் ஓய்வூதியப் பலன்களான, இபிஎப் என்ற ஊழியர்களின் சேமலாப நிதி, இடிஎப் என்ற ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடை ஆகியவை தங்கள் ஊழியர்களுக்குப் பொருந்துமா என்பது குறித்தும், போர்ட் சிட்டி நிர்வாகம் தெளிவைக் கோரி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வகை வங்கிக் கணக்கு

இந்த வணிகங்கள் போர்ட் சிட்டியில் தங்கள் அலுவலகங்களை அமைக்கும்போது, அந்நியச் செலாவணியில் தங்கள் ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை செலுத்தினால், அவர்கள் இபிஎப், இடிஎப் மற்றும் கருணைத் தொகையை செலுத்த எந்தப் பொறுப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், போர்ட் சிட்டி நிர்வாகம், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

தற்போது, ஒரு வங்கி மற்றும் ஒரு காப்புறுதி நிறுவனம் உட்பட சுமார் 30 நிறுவனங்கள், 269 ஹெக்டேர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் செயல்படுவதற்கு உரிமங்களைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டில், போர்ட் சிட்டியில் வணிகத்தை மேற்கொள்வதற்காக பிரத்தியேகமாக கொழும்பு துறைமுக நகர முதலீட்டுக் கணக்கு எனப்படும் சிறப்பு வகை வங்கிக் கணக்குக்கு, இலங்கை மத்திய வங்கி அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.