வவுனியா – வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரிடம் விசாரணை!

0
168

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் நெடுங்கேணி பொலிஸாரால் அழைக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (12.12.2023) மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வட வவுனியா, ஓலுமடு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் புத்தர் சிலையும் வைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருந்ததுடன், ஆதிசிவன் ஆலய விக்கிரகங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் வழக்கு விசாரணைகளின் பின்னர் தொல்பொருட்களை சேதப்படுத்தாது வழிபாடு செய்வதற்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

வாக்கு மூலம் பதிவு 

இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் ஆகியோரை அழைத்த நெடுங்கேணி பொலிசார் அவர்களிடம் 2019 – 2020 ஆம் ஆண்டு வருடாந்த திருவிழாவிற்கு அனுமதி தந்தது யார்? 2019 ஆம் ஆண்டு ஏணிப்படி அமைப்பதற்கு நிதி உதவி வழங்கியது யார்?, ஏணிப்படியினை மலைக்கு கொண்டுசென்று நிறுவியவர்கள் யார்? 2019 – 2020ஆம் ஆண்டு திருவிழாவிற்கு ஒலி பெருக்கியினை பயன்படுத்த அனுமதி தந்தது யார்?, 2019 ஆம் ஆண்டு ஆலய சூழலை அடையாளப்படுத்தும் நோக்கில் சில முக்கிய மரங்கள் தொல்பொருள் சாராத இடங்களுக்கு வெள்ளைநிற சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. அதனை செய்தது யார்? எனக் கேள்விகள்  கேட்கப்பட்டு வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா - வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரிடம் விசாரணை! | Vedukunari Adi Shiva Temple