ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் இலங்கைக்கு ஐந்து சதம் கூட இலாபம் இல்லை

0
133

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக அரசாங்கத்திற்கு இலாபம் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மொத்த பங்குகளில் 15 வீதம் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமானதாகும்.

எவ்வாறாயினும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இதுவரை எவ்வித இலாபத்தையும் ஈட்டாத காரணத்தினால் அரசாங்கத்திற்கு வருவாய் எதுவும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் வருமானத்தை அதிகரித்து இலாபத்தை ஈட்ட முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிரகாரம் பல வருமானம் ஈட்டும் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கவனம் செலுத்தியுள்ளார். அந்த திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் அமைச்சில் நடைபெற்றது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய வங்கி மற்றும் முதலீட்டு சபையுடனான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் அந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண துறைமுகங்கள் அமைச்சு தலையிடும் என அமைச்சர் குறிப்பிட்டார். இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை துறைமுகத்தில் நிறுத்தி மீள் ஏற்றுமதி செய்வதே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பிரதான செயற்பாடுகளாக இதுவரை காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலாபகரமான துறைமுகமாக மாற்றுவதற்கு அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தேவைப்பட்டால் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.