இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை; தீர்வு காண நாமல் எம்.பி அழைப்பு

0
168

கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகளின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் வீரர்கள் அசௌகரியங்களுக்கும் பாரபட்சங்களுக்கும் ஆளாக நேரிடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது நிர்வாக பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலம் தீர்த்துவைத்ததாகவும், விளையாட்டு மற்றும் வீரர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலுக்கும் கிரிக்கட் நிர்வாகத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையினால் இலங்கை கிரிக்கெட் தடைசெய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத் தடை காரணமாக வருடாந்தம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 100 மில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்படுவதாக நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இல்லை என்பதனை இலங்கை கிரிக்கெட் சபை நிரூபிக்கும் வேண்டும் என சர்வதேசக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டுக்குள் அரசியல் புகுந்துள்ளது எனத் தெரிவித்துள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கைக் கிரிக்கெட்டை உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியது.

இலங்கைக் கிரிக்கெட் சபை சில வருடங்களாக பெரும் அரசியல் தலையீடுகளுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றது என பல தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.