அமெரிக்காவில் காங்கிரஸை ஆய்வு செய்த இலங்கை பாராளுமன்ற குழு

0
170

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) முழுமையான நிதிப் பங்களிப்பு மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (இலங்கை) (NDI) தொழிநுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு ஆதரவுடன் பாராளுமன்றத்தின் சகல துறைசார் மேற்பார்வைக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் குழு முறைமை குறித்து ஆய்வு செய்யும் பத்து நாட்கள் ஆய்வுப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த ஆய்வுப் பயணத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்கள், குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பாராளுமன்ற பணியாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸில் நீண்டகாலமாகச் செயற்பட்டுவரும் குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய அறிவு மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், அந்தக் குழுக்களின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அவற்றின் தொழில்நுட்ப அணுகுமுறைகளை இனங்காண்பதற்கும், அவற்றின் புதிய போக்குகளை ஆய்வு செய்து, அந்தக் குழுக்களின் பொதுமக்கள் பங்கேற்பு இடம்பெறும் விதம் என்பன குறித்து ஆராய்வதற்கும் இந்தக் குழுவுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அமெரிக்க அரசாங்கத்தின் பொறுப்புக் கூறல் அலுவலகம் (Government Accountability Office), அமெரிக்க காங்கிரஸ் வரவுசெலவுத்திட்ட அலுவலகம் (Congressional Budget Office), காங்கிரஸ் ஆய்வு சேவைக்கான நிலையம் (Congressional Research Service – CRS) உட்பட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமெரிக்க காங்கிரஸில் உள்ள இலங்கை ஒன்றியத்தின் அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். குடிமக்கள் மத்தியில் பாராளுமன்ற ஜனநாயகம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துவது தொடர்பில் இச்சந்திப்புக்களில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், அமெரிக்க காங்கிரஸ் ஆய்வு நிலையத்தினால் காங்கிரஸ் உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்டுள்ள தரப்படுத்தப்பட்ட மற்றும் தரம் வாய்ந்த ஆய்வுத் தகவல்கள், தரவுகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.

இதற்குத் தேவையான பயிற்சி மற்றும் பாடநெறியைத் தொடர்வதற்கு இலங்கை பாராளுமன்ற பணியாளர்களுக்கு இடமளிப்பது சிறந்த பெறுபேறுகளுக்கு வழிவகுக்கும் என்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆய்வுக் குழுவின் நிலைப்பாடாக இருந்தது.

அத்துடன், சபாநாயகரின் அனுமதியுடன், பாராளுமன்ற செயலகத்தின் இணக்கப்பாட்டுடன் குழுக்களுக்கு ஒழுக்கக் கோவை மற்றும் நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவதை முன்மொழிவதற்கும் இந்தக் குழு இணங்கியது.

இந்தப் பரிந்துரைகளை திறம்படச் செயற்படுத்துவதற்கு, இத்திட்டத்துடன் மாத்திரம் வரையறுக்காது மாதம் தோறும் கூடி பலன்கள் மற்றும் முன்மொழிவுகளை கலந்துரையாடவும் ஆய்வுக் குழு இணங்கியது.