கொள்கைகளை மீறிக் கொண்டு நாட்டு மக்களை மறந்துவிட்டு தனிப்பட்ட பேராசைக்காக ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் பெற தாம் தயாராக இல்லை என எதிர்க்கட்சித் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சதஹம் யாத்தரா நிகழ்ச்சியின் 1500 ஆவது நிகழ்வு நேற்று (15) கேகாலை, கலிகமுவ வட்டராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மொட்டுவின் 134 உறுப்பினர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஆணையுடன் ஜனாதிபதி கதிரைக்கு சென்ற தற்போதைய ஜனாதிபதி, மொட்டு திருடர்கள் குழுவின் பாதுகாவலராக மாறி தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை மறைத்து வருகின்றார்.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கூட ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகளை பெற்றுக் கொள்ளமுடியாத விதமாக மறைத்து வைத்துள்ளனர். உண்மையை மறைப்பதால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்.
பூரண அரசாட்சியை தருவதாக கூறினாலும் மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியையோ அல்லது பிரதமர் பதவியையோ ஏனைய பதவியையோ அரச அதிகாரத்தையோ பெற தாம் தயார் இல்லை.
சமய ஸ்தலங்கள் ஊடாக வெளியிடப்படும் சமய செய்திகளின் அடிப்படையில் ஐக்கிய இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டாலும் கடந்த காலங்களில் மலட்டுக் கொத்து, மலட்டு அறுவை சிகிச்சை என கூறி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தினர்.
இதனால் தான் போராட்டத்திற்கு முன் நல்லிணக்கம் என்பது கடுமையான வார்த்தை பிரயோகமாக அமைந்து காணப்பட்டது. தேசபிமானம் என்ற பெயரால் இவ்வாறு தாக்கப்பட்ட போதிலும் நாட்டை அடிமைப்படுத்தி நாட்டின் வளங்களை அபகரித்த ஜனாதிபதியையும் குடும்பத்தையும் விரட்டியடிக்க மக்கள் ஒன்றாய் வீதியில் இறங்கி நடந்திய போராட்டத்தின் பின்னர் நல்லிணக்கம் என்ற வார்த்தை முக்கியமான அரச கொள்கையாக மாறியுள்ளது.
நாட்டை அழித்த தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால் தாம் தற்போது நாட்டின் ஜனாதிபதி என்றும் நாட்டை அழித்த மொட்டுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும் ஒப்பந்தமொன்று போட வேண்டிய தேவை ஏற்பட்டால் அத்தகையதொரு ஒப்பந்தம் அரசியல் கட்சிகளுடன் அன்றி 220 இலட்சம் பேருடன்தான் போடப்படும்.
ஒரு குடும்பம் ஒருதலைபட்சமாக அதிகாரத்திற்கு உரிமை கோரியவாறு தனி ஆட்சியை நடத்திய நாட்டில் ஒரு கட்சிக்குள் பிரதிவாதங்கள் ஏற்படும் போது கட்சிகளுக்குள் மோதல்கள் உருவெடுத்துள்ளது என்று விளம்பரம் செய்தாலும் அது மோதலாகாது.
முறைமை மாற்றம் கோரும் நாட்டில் எழுந்துள்ள இந்த வாதங்கள் ஒரு ஜனநாயகப் போக்கின் தொடக்கமாகும். தலைவர் தவறு செய்தாலும் சுதந்திரமாக பேசுவதே அடிமை அரசியலில் இருந்து விடுபட்டு ஜனநாயக பாதையில் பிரவேசிப்பதற்கான இலட்சனமாகும்.
வாத பிரதிவாதங்களை முன்வைப்பதில் இறுதியில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும். அடிமைத்தனமான குடும்ப அரசியலில் இருந்தும் மதத்தை விற்கும் குடும்ப அரசியலிலிருந்தும் விலகுவதிலும் ஜனநாயக சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எதிர்ப்புத் தெரிவிக்கும் சுதந்திரம் உள்ள மத்தியஸ்த பாதையில் சமூக ஜனநாயக பயணத்தை மேற்கொள்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.
புத்த பகவான் கூட ஊழலையும் மோசடியையும் நிராகரித்தார் என்றாலும் நாட்டு மக்களை அடிமைகளாக கனவு காணும் பெரும் குடும்பங்கள் தேசாபிமான பெருமிதத்துடன் பௌத்தத்தை முன்நிறுத்தி மக்களை ஏமாற்றி நாட்டைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் முன் வந்து இறுதியில் நாட்டின் வளங்களையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
தற்போது நாட்டில் உள்ள 220 இலட்சம் பேரினதும் வளங்களை கொள்ளையடித்தவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு இழந்த வளங்களை மீட்பதற்கு தயாராக உள்ளனர்.
சதஹம் யாத்ரா வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸ அத்தநாயக்க அவர்கள் 1802 மத ஸ்தலங்களுக்குச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியின் சமயக் கொள்கைகள் மற்றும் சமூக நல்லிணக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
பௌத்த விகாரைகளில் இடம் பெறும் நிகழ்வுகளில் 1500 ஆவது நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றமை பெருமைக்குரியது” என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.