அசாத் மௌலானாவின் வாக்கு மூலம் சத்திய சோதனையா…!

0
79

சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதல் ஆவணப்படம் பல்வேறுபட்ட சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

அது முற்றிலும் பொய்யானது என இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால் ‘புத்தம், தர்மம், சங்கம்’ என்ற பௌத்தத்தின் மும்மணிகள் படுகொலை வழியில் இலங்கைத் தீவில் தொடர்ந்து நிலைநாட்டப்படும். அவ்வாறாகவே இலங்கை “தம்தீபக்” கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து நிர்மாணிக்கப்படும்.

இலங்கை வாழ் ஏனைய சிறுபான்மை இனங்களை அழித்து இலங்கை தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கான வீதி வரைபடம் வரையப்பட்டுவிட்டது என்பது உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன் மேலும் உறுதிபட நிரூபிக்கப்பட்டு விட்டது.

இலங்கையில் 7.4% கிறித்தவர்களாவர். இவர்களில் கத்தோலிக்கர்கள் 5% ஆவர் . ஏனைய கிறித்தவர்களில் ஆங்கிலிக்கான் திருச்சபை 1%, அமெரிக்கன்மிசன்1% (சீர்திருத்தத் திருச்சபையினர்) ஆவார். மற்றும் பெந்திக்கோஸ் திருச்சபைகள்1.5% ஆவர்.

இலங்கையில் (21-04-2019) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 3 தேவாலயங்கள், கொழும்பின் 3 ஐந்து-நட்சத்திர விடுதிகள் என 7 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 253 கொல்லப்பட்டனர். இதில் 49 வெளிநாட்டவர் அடங்குவர்.

அசாத் மௌலானாவின் வாக்கு மூலம் சத்திய சோதனையா..! | Article About Channel 4 Easter Bombings In Tamil

இனச்சுத்திகரிப்பு மூலபாயங்கள்

சுமார் 450 பேர் காயமடைந்துள்ளதனர். இத்தாக்குதலில் 9 தற்கொலைக் குண்டுதாரிகள் 7 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அடங்கலாக 16 பேர்(தேசிய தவ்கீத் ஜமாத்) மரணமாயுள்ளனர். இத்தாக்குதலானது இஸ்லாமிய அடிப்படைவாத தாக்குதலாக சித்தரிக்கப்பட்டாலும் அது பல்பரிமாணங்கள் கொண்டதாக, இனவழிப்பு, இனச்சுத்திகரிப்பு மூலபாயங்களைக் கொண்ட ஆபத்தான போக்காகும்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனின் செயலாளராக அசாத் மெளலான வெளியுலகிற்கு அறிமுகமானவர். ஆனாலும் அவர் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலினால்த்தான் பிள்ளையுடன் திட்டமிட்டு இணைக்கப்பட்டார் என்பதும் முக்கியமானது.

சேனல் 4 தொலைக் காட்சி ஆவணப்படத்தில் உண்மையை வாய்திறக்கும் சாட்சியமாக அறிமுகப்படுத்தப்படும் அசாத்து மௌலானா இஸ்லாமிய அடிப்படை வாரத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டவர்.

அசாத் மௌலானா ஜெனிவா மனித உரிமைச் சபையின் முன்பாக ஒப்புவித்த வாக்கு மூலத்தின் மூலம் அவர் தன்னை புனிதப்படுத்திவிட்டார் என்று கருதிவிடக்கூடாது. அவர் இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த இன ஒடுக்குமுறை இயக்க விசையின் விதியின் பயனே இந்த வாக்கு மூலத்தை அளிப்பதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகவே இந்த வாக்குமூலம் முற்றிலும் குற்ற ஒப்புவிப்பு வாக்குமூலமாகவே கருதப்பட வேண்டும். ஈஸ்டர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 269 அப்பாவி கிறிஸ்தவர்களின் மரணத்திலும் இவருடைய கை கறைபடிந்துள்ளது.

விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ இவருக்கு பங்கு உள்ளது என்பதனை இங்கே கருத்திற்கொள்ள வேண்டும். எனவே ஆசாத் மௌலானாவின் வாக்குமூலச் சத்திய சோதனையை எந்தவகை நீதியினாலும் நியாயப்படுத்த முடியாது.

ஆனாலும் இந்தத் தருணத்தில் அவர் முன்வந்து அளித்த வாக்குமூலம் வரவேற்கத்தக்கதே. அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்தின் மூலம் ஈஸ்டர் குண்டு தாக்குதலும் அது சம்பந்தப்பட்ட அந்த குண்டு தாக்குதலுக்கு பின்னால் இருந்த பலருடைய முகங்கள் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு பலர் அம்புகளாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் விபரங்களும் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

வெற்றியை தடுக்கும் நோக்கம்

அசாத் மௌலானாவின் வாக்கு மூலம் சத்திய சோதனையா..! | Article About Channel 4 Easter Bombings In Tamil

இந்தக் குண்டு தாக்குதலின் ஒரு அங்கமாக அசாத் மௌலான தானும் செயற்பட்டார் என்பதை அவர் ஒப்புக் கொண்டும் இருக்கிறார். ஆனால் சேனல் 4 இன்றைய இந்த காலச் சூழ்நிலையில் ஏன் இந்த ஆவணப்படத்தை வெளியிடுகின்றது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையின் அரசியல் கொதிநிலையில் இலங்கைத் தீவு ஒரு ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் முதல் அர்த்தம் என்னவெனில் ராஜபக்ச குடும்பம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கத்தை கொண்டது.

அவர்களுடைய வெற்றியை தடுக்கும் நோக்கத்தை கொண்டது. அவர்களின் அரசியல் செல்வாக்கை வீழ்த்தும், தடுக்கும் நோக்கத்தை கொண்டது. இந்த ஆவணப் படத்தின் பின்னணியில் மேலைத் தேசத்தின் கரங்கள் உள்ளன என்பதனையும் இது வெளிக்காட்டுகிறது.

இலங்கை அரசியலில் மேற்குலகத்தின் ஆதரவு சக்திகள் செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்பது அப்பட்டமாக தெரிகிறது. எது எப்படி இருப்பினும் இலங்கை அரசியலில் யார் ஆதிக்கம் செலுத்தினாலும் இலங்கையின் ஆளும் குழாம் என்பது மகாவம்ச மனநிலையில் இருந்து ஒருபோதும் வெளியேவர மாட்டாது.

இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த ஆளும் உயர்குழாம் தமக்கு இடையேயான அதிகார போட்டியிலும், அதிகாரப் பங்கீட்டிலும் தம்மதீப மனநிலையிலிருந்தே செயல்படும். அவர்கள் இலங்கைத் தீவை பௌத்த நாடாக பிரகடனப்படுத்துவதிலேயே ஆளுக்காள் போட்டியிட்டு, குறியாக இருப்பர்.

“”யானைகள் தமக்கிடையே மோதிக் கொண்டாலும் புல்லுக்குத்தான் சேதம்; அவை கூடிக்கூலாவிப் புணர்ந்தாலும் புல்லுக்குத்தான் சேதம்”” என்று அரசியல் ஆய்வாளர் மு திருநாவுக்கரசு கூறுவது சாலப் பொருந்தும். இதுதான் இலங்கை தீவின் அரசியல் அதிகாரத்தில் இருக்கின்ற யானைகளின் நிலைப்பாடு.

அவ்வாறே புற்களின் நிலையில்தான் சிறுபான்மை இனங்கள் இலங்கை தீவில் சிங்கள பௌத்த ஆளும் அரசியல் அதிகாரப் போட்டியினால் நசித்து அழிகின்றனர், அழிக்கப்படுகின்றனர்.

இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த ராஜதந்திரம் ஒப்பிட்ட அளவில் ஆசிய பிராந்தியத்தில் பெருவளர்ச்சி அடைந்துள்ளது. அது எத்தகைய நெருக்கடிகளையும் சமாளித்து தன்னை தற்காத்துக் கொள்ளக்கூடியது.

பாதுகாப்பு என்ற போர்வை

அசாத் மௌலானாவின் வாக்கு மூலம் சத்திய சோதனையா..! | Article About Channel 4 Easter Bombings In Tamil

பூகோள அரசியலிலும்சரி புவிசார் அரசியலிலும்சரி ஏற்படுகின்ற மாற்றங்களை தனக்கு ஏற்ற வகையில் பிரயோகிப்பதில் அது பெருவெற்றி கண்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தன்னை தொடர் வளர்ச்சிக்கு உட்படுத்தியும், செப்பனிட்டும் புதிய அரசியல் வடிவமெடுத்தும் மேலும் வளர்ந்து செல்கிறது.

அந்த வளர்ச்சி படிநிலைகளை இலங்கை தீவின் இன முரண்பாடுகளுக்குள் பொருத்தியும் பார்க்க முடியும். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்தபோது சிங்கள ஆளும் குழாத்தின் முதல் எதிரியாக இலங்கை கம்யூனிஸ்டுகள் தென்பட்டார்கள்.

இரண்டாம் எதிரியாக இந்தியாவும் மூன்றாம் எதிரியாகவே ஈழத் தமிழரும் நான்காம் எதிரியாக இஸ்லாமியர்களும் அங்கிலிகான் கிறிஸ்தவர்களும் தென்பட்டார்கள். அப்போது சிங்கள பௌத்தத்தினால் அங்கிலிக்கான் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து என்பதை தெளிவாக உணர்ந்ததனால்தான் சோல்பெரியாப்பில் சோல்பரிப் பிரபுவ 29ஆம் சரத்தை உருவாக்கினார்.

இச்சரத்தில் ஏ,பி, சி, டி எனப்படும் நான்கு பந்திகள் சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற போர்வையில் மேலைத்தேச பண்பாட்டுடன் வளர்ந்த இலங்கை அரசியல் அதிகாரத்தில் போட்டியிடக்கூடிய செல்வாக்க செலுத்தக்கூடிய அங்கிலிக்கான் கிறிஸ்தவர்களை பாதுகாப்பதற்காகவே அரசியலமைப்பில் 29 ஆவது சரத்து இணைக்கப்பட்டது என்துதான் உண்மையாகும்.

இத்தகைய நான்கு எதிரிகளையும் வீழ்த்துவதற்கு அவர்கள் பயன்படுத்திய தந்திரோபாயம் அபரிவிதமானது. அவர்கள் முதலாம் எதிரியை வீழ்த்துவதற்கு ஏனைய மூன்று எதிர்களுடன் கூட்டுச் சேர்ந்தார்கள் கூட்டுச் சேர்ந்தன் மூலம் மலைய மக்களின் வாக்குரிமையை பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கினர்.

கம்யூனிஸ்டுகளின் பலமாக இருந்த இந்தியத் தோட்டத் தொழிலாளரை ச முடக்கியதன் மூலம் கம்யூனிஸ்டுகளை களத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள் . சம நேரத்தில் இந்தியாவின் நேரடிப் பலமாக இருந்த மலையக மக்களை நாட்டை விட்டு வெளியேற்றினார்கள். அதன் பின்னர் சில முஸ்லிம் தலைவர்களை இணைந்து சிங்கள மொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான உதவியைப் பெற்றார்கள்.

ஒரு ஆயுதப் போராட்டம்

பின்பு விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் முஸ்லிம்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு தமிழர்களுடைய போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் முடக்கினார்கள்.

இப்போது நான்காவது எதிரி மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு அவர்களுக்குள்ளேயே இஸ்லாமிய அடிப்படை வாதத்தை தோற்றுவித்து அந்த இஸ்லாமிய அடிப்படை வாதத்தை பயன்படுத்தி இலங்கை பௌத்த ஆழும் குழாத்துக்குள் பெரும் நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது ஈஸ்டர் கொண்டு தாக்குதல் நடத்தியதன் மூலம் இரண்டு பகுதியினரையும் மோதவிடும் தந்திரோபாயத்தை சிங்கள பௌத்த பேரணவாதம் கையாண்டிருக்கிறது என்பதுதான் இங்கே உண்மையானது.

இலங்கை தீவுக்குள் இன்று இருக்கின்ற நிலையில் இலங்கையின் இராணுவமும் அதன் புலனாய்வு துறையும் பெரு வளர்ச்சியடைந்திருக்கின்றன. நினைத்த மறுநிமிடம் இலங்கை தீவில் இத்தகைய குற்ற செயல்களையும் தடுத்து நிறுத்த கூடிய அளவு ஆளணிவளத்தையும் தொழில்நுட்ப வளத்தையும் இலங்கை ஆயுதப்படை கொண்டிருக்கிறது.

அத்தகைய ஒரு சூழலில் இலங்கை ஆயுதப்படைகளுக்கு தெரியாமல், அவற்றினுடைய அனுமதியின்றி, அவற்றினுடைய அனுசரணையின்றி எந்த ஒரு தாக்குதலையும் இஸ்லாமியர்களால் இலங்கை தீவுக்குள் நடத்த முடியாது. அத்தோடு இலங்கை வாழ் முஸ்லிம்களால் இலங்கை தீவுக்குள் ஒரு பெரிய ஆயுதப் போராட்டத்தையோ அல்லது தாக்குதல்களையோ நடத்த முடியாது.

இஸ்லாமிய அடிப்படை வாதிகள் தோற்றுவிக்கப்படலாம் . ஆனால் அவர்களுக்கான ஆயுத வழங்களை பெறுவது இலகுவானதன்று. இலங்கை தீவுக்குள் இருந்து கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமக்கான வளங்கல்களை இலங்கை தீவுக்கு கிட்டிய இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தானில் இருந்தோ அல்லது பங்களாதேஷத்தில் இருந்தோம் பெற வேண்டுமானால் அரபியக் கடலிலும் வங்கக் கடலிலும் சுமார் 2000 கிலோமீட்டர்களுக்கு மேல் கடற் பயணங்களை மேற்கொண்டுதான் பெறமுடியும்.

அல்லது இந்தோனேசியா மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெற வேண்டுமானால் சுமார் 2500 கிலோமீட்டர்கள் வங்கக் கடலில் ஊடான கடற் பயணத்தின் மூலமாகவே வழங்களைப் பெறவேண்டி இருக்கும்.

அராபிய நாடுகளாக இருந்தால் சுமார் 3000 கிலோமீட்டர் பயணிக்க வேண்டி இருக்கும். ஆகவே இத்தகைய நடைமுறைகள் எதுவும் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை. எனவே இலங்கை தீவுக்குள் இஸ்லாமியர்கள் ஒரு அடிப்படைவாத தாக்குதலையோ அல்லது ஒரு ஆயுதப் போராட்டத்தையே ஒருபோதும் நடத்த முடியாது.

அதற்கான எந்த வாய்ப்புகளும் இலங்கை தீவுக்குள் இன்று இல்லை. ஆனாலும் இலங்கை தீவை இன்னும் 60 வருடங்களுக்குள் இஸ்லாமிய நாடாக மாற்றிவிடக் கூடிய சக்தி இஸ்லாமியர்களுக்கு உண்டு என்று சிங்களத் தரப்பிலிருந்து மக்கள் தொகைப் பெருக்க அடிப்படையிலான ஆய்வு நூல்களும் ஊடகப் பேச்சுக்களும் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

இதனைத்தான் “”வியட் மகா”” என்ற சிங்கள பௌத்த அறிஞர் குழாம் இன்னும் 60 வருடங்களில் இலங்கையின் பெரும்பான்மையினராக முஸ்லிம்களே இருபர் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சேனல் 4 தொலைக் காட்சியின் ஈஸ்டர் குண்டு தாக்குதல் ஆவணப் படம் சர்வதேச ரீதியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் அது ஒரு வெறும் ஆவணப்படமாக மாத்திரமே இருக்கப் போகிறது.

உலகத் தமிழர் மத்தியிலும் ஈழத்தமிழர் மத்தியிலும் இது ஒரு பெரும் பேசு பொருளாக பேசப்படக்கூடும். அவ்வாறே அண்டை நாட்டு தமிழ ஊடகங்களும் இதனை ஒரு பேசு பொருளாக பேசிக் கொண்டிருப்பர். ஆனால் செயல்முறையில் இதனால் எதுவும் விளையப் போவதில்லை. சிங்கள தேசியவாதத்தை பொறுத்த அளவில் அது சீன ஆதரவு, இந்திய-மேற்குலக எதிர்ப்பு என்ற கட்டத்துக்குள் நிற்கிறது. எனவே இந்த ஆவணப்படத்தை அவர்கள் பொய் என்றே நிராகரிப்பர்.

அசாத் மௌலானாவின் வாக்கு மூலம் சத்திய சோதனையா..! | Article About Channel 4 Easter Bombings In Tamil

திட்டமிட்டு செய்த குண்டு தாக்குதல்

அதனை பெரும்பான்மை சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்வர். சிங்கள தேசியவாதம் முறுக்கேறி இருக்கும் இன்றைய சூழலில் இந்த ஆவணப்படத்தினால் இலங்கைத் தீவுக்குள் பெரிய மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

அது சிங்கள பௌத்த பேரணவாதத்தின் நிகழ்ச்சி நிரல்தான் இலங்கை தீவுக்குள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த அடிப்படையிற்தான் சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் எந்த ஒரு பௌத்தனும் கொல்லப்படாமல் இருக்கக் கூடிய வகையிலேயே திட்டமிடப்பட்டுள்ளது.

குறி வைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் முன்னாள் தமிழராய் இருந்து பின்னாளில் சிங்கள மொழிக்கு மாறிய சிங்களக் கிறிஸ்தவருடையதும் மேலும் கிழக்கில் தமிழ் கிறிஸ்தவர்களுடையதுமான வழிபாட்டுக்குரிய தேவாலயங்களாகவே அமைந்துள்ளன என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் என்பது வெறுமனே ராஜபக்சக்கள் அதிகாரத்துக்கு வருவதற்காக திட்டமிட்டு செய்த குண்டு தாக்குதல் என்ற வரையறைக்குள் மட்டும் நின்று கொள்ளக்கூடாது. இது பல்பரிமாணங்களைக் கொண்ட ஒரு தாக்குதலாக அமைந்திருக்கிறது.

எதிரிகளைக் கொண்டு எதிரிகளையே வீழ்த்துகின்ற தந்திரோபாயத்தை கொண்டிருக்கிறது. நீதியின் முன் அல்லது சட்டத்தின் முன் தாக்குதல்கள் நடத்தியவர்களையும் அதன் பின்னணியில் இருப்பவர்களுக்கும் தண்டனை வழங்கலாம், விசாரிக்கப்படலாம் எனப் பலரும் எதிர்வு கூறல்களை செய்யலாம்.

ஆனால் அவை ஒன்றும் நடைமுறைக்கு வராது. இப்போது ஈஸ்டர் குண்டு தாக்குதல் பழங்கதை ஆகிவிட்டது. அது பதிவேடுகளுக்கும் ஆவண புத்தகங்களுக்கு மாத்திரமே இடம்தரும். ஆனாலும் இந்த தாக்குதல்களின் காரண காரியங்கள், அவற்றினுடைய செயற்பாடுகள், அவை தரவல்ல விளைவுகள் என்பதை பற்றியே இப்போது சிந்திக்க வேண்டும்.

அதுவே மிக முக்கியமானதுமாகும். இலங்கைத் தீவை பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதிலேயே இறுதியிலும் இறுதியில் சென்று முடியும் என்பதனை யாவரும் மனதிற் கொண்டு தற்காப்ப வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே இன்றைய காலத்தின் தேவை. 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு 16 September, 2023 அன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் Tamil News தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.