பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களாக அறியப்படும் ‘ஹரக் கட்டா’ எனும் நந்துன் சிந்தக்க சி.ஐ.டி.யின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உதவியுடன் தப்பிச் செல்ல முயன்ற சம்பவத்தை மையப்படுத்தியதாக சி.ஐ.டி.யின் கொலைகள் மற்றும் பாதாள உலக குற்றங்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் லமாஹேவா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரக் கட்டா தொடர்பில் சி.ஐ.டி.யின் பொது மக்கள் முறைப்பாட்டு பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், அப்பிரிவுடன் தொடர்பில்லாத உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் லமாஹேவா, இரவு நேர கடமைகளிடையே ஹரக் கட்டாவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தி இவ்வாறு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
அதன்படி, மெரில் ரஞ்சன் லமாஹேவா ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 11ஆம் திகதி மடகஸ்காருக்கு சி.ஐ.டி.யின் இரு உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் அதிரடிப் படையின் 4 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழு அங்கு சென்று ஹரக் கட்டா உள்ளிட்ட இருவரை பொறுப்பேற்றிருந்ததுடன் அவர்கள் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும் குறித்த பொலிஸ் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஹரக் கட்டா, குடு சலிந்துவின் பாதுகாப்பு தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அது தொடர்பிலும், விசாரணை வியூகம் தொடர்பிலும் விஷேட கலந்துரையாடலை அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட முன்னரேயே நடாத்தியுள்ளார்.
கடந்த மார்ச் 13 ஆம் திகதி அந்த கலந்துரையாடலை அவர் நடாத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் ஒருவன் செய்திச் சேவைக்கு வெளிப்படுத்தின.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகர ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்துள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு ஹரக் கட்டாவையும், சலிந்துவையும் அழைத்து வந்த பின்னர் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது.
அத்துடன் அவ்விருவரின் பாதுகாப்பு கருதி அவர்களை வேறு பொலிஸ் குழுக்களுக்கு கையளிப்பதில்லை எனவும் ஏனைய பொலிஸ் குழுக்களுக்கு விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படின் அப்பொலிஸ் குழுக்கள் சி.ஐ.டி. பணிப்பாளரின் அனுமதியுடன் சி.ஐ.டி.க்கு சென்று விசாரிக்க முடியுமான வகையில் பொறிமுறையை ஏற்படுத்தவும் இதில் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன் அதன்படி அவ்விருவரும் சி.ஐ.டி.யின் பொது மக்கள் முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உதவியுடன் மயக்க மருந்து கலந்ததாக கருதப்படும் ஒரு வகை டொபிகளை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கி ஹரக் கட்டா தப்பிச் செல்ல இவ்வாரம் முயன்றிருந்தார்.
எனினும் அந்த முயற்சி தோல்வியடையவே, இவ்வாறு தப்பிச் செல்ல உதவியதாக கூறப்படும் கான்ஸ்டபிள், ஹரக் கட்டா சி.ஐ.டி.க்கு வெளியே வந்த்ததும் தப்பிச் செல்ல தயாராக இருந்த வானில் தப்பிச் சென்றிருந்ததுடன் அந்த வான் இன்று மாத்தறை பகுதியில் மீட்கப்பட்டது.
இந்நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.