கட்ட முடியாத பாலமும் கட்டப்படும் விகாரைகளும்!

0
191

‘இந்திய பெருங்கடல் மற்றும் பரந்த இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகள் குறித்து இலங்கை முழுமையாக அறிந்திருக்கிறது. இந்தியாவில் உருவாகி வரும் சூழ்நிலைகள் குறித்து இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது’ என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி அனந்தா மையத்தில், “இந்தியா – இலங்கை உறவுகள்: இணைப்பை ஊக்குவித்தல், செழிப்பை ஊக்குவித்தல்”என்ற தலைப்பில் நடைபெற்ற விரிவுரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘இலங்கை – இந்திய நில இணைப்பு மற்றும் வலுவான பொருளாதார உறவுகளை கட்டியெழுப்புவதன் மூலமு் இலங்கை பொருளாதார ஸ்திரமடைய முடியும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மிலிந்த மொரகொட

ஆனால் கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித் இலங்கையை இந்தியாவுடன் இணைக்கும் உத்தேச தரைப் பாலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அப்படி ஒரு பாலம் அமைக்கப்படுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்களின் விருப்பத்தினைப் பெற வேண்டும் என்று கர்தினால் கூறியுள்ளார்.

ராகம தேவத்த பசிலிக்கா தேவாலயத்தில் கடந்த ஞாயிறு இடம் பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியாக ஆட்சியாளர்களே நாட்டை வெளிநாட்டவர்களுக்கு காட்டிக் கொடுத்து வருவதாக’ கர்தினால் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆட்சியாளர்கள் நாட்டை பல்வேறு நாடுகளுக்கும் படைகளுக்கும் விற்று, பல்வேறு முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து, நாட்டை அழிவை நோக்கி இட்டுச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கரர்தினால் மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

தவறான வெளிவிவகார கொள்கை மற்றும் இராஜதந்திர உறவுகளை நிர்வாகிப்பதன் காரணமாக எதிர்காலத்தில் இலங்கை தெற்காசியாவின் யுக்ரேனாக மாறும் தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் இலங்கை ஒரு சுதந்திர நாடாக இன்றி இந்திய நாடாக மாறத் தயாராகி வருவதாக’ என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவுகளால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற போதும் இந்தியாவுடனான உறவை தற்போதைய அரசாங்கம் நிர்வகிக்கும் முறை கேள்விக்குறியாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மல்கம் ரஞ்சித், சரித ஹேரத் போன்றவர்கள் மட்டுமல்ல விமல் வீரவன்ச, உதய கம்பன்பில போன்றவர்களும் இந்தியாவுடனான இணைப்புத் திட்டங்கள் தொடர்பில் எதிர்ப்புக் காட்டியுள்ளார்கள்.

இலங்கையைத் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து வடக்கு, கிழக்கை முழுமையாக அபகரிக்கவே இந்தியா விரும்புகின்றது. இதற்கு நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம் என்று அவர்கள் இருவரும் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள்.

இலங்கைக்குள் எந்த நாட்டவர்களும் வந்து போகலாம். இலங்கை அரசின் அனுமதியுடன் எந்த நாட்டுக் கப்பலும் இங்கு வந்து தரித்து நிற்கலாம். இலங்கைக்கு எந்த நாடும் உதவிகளை வழங்கலாம்.

இந்தியா மாத்திரம்தான் இலங்கையின் தோழன் அல்ல. இலங்கை மீது இந்தியாவுக்கு எவ்வளவு அக்கறை உண்டோ அதேயளவு அக்கறை சீனாவுக்கும் உண்டு. ஏனெனில் சீனாவும் இலங்கைக்கு அவசர நிலைமைகளின் போது உதவி வழங்கும் பிரதான நாடாகும்.

இலங்கை விவகாரத்தில் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர்களிருவரும் தெரிவித்திருக்கிறார்கள். மேற்கண்ட செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.

அண்மையில் புதுடெல்லிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கே இரண்டு நாடுகளுக்கும் இடையே தரைப்பாலம் அமைக்கும் யோசனையை முன் வைத்திருக்கிறார். அது ஒரு புதிய யோசனை அல்ல.

ஏற்கனவே திருமதி சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் அவர் அந்த யோசனையை முன்வைத்திருக்கிறார். இப்பொழுது அந்த யோசனையை அவர் புதுப்பித்து இருக்கிறார்.

அவர் எப்பொழுதெல்லாம் அந்த யோசனைகளை முன்வைக்கின்றார்? எப்பொழுதெல்லாம் புதுடில்லி கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அவர் அந்த யோசனையை முன்வைக்கின்றார்.

அவருக்கே தெரியும் அது நடக்கக்கூடிய காரியம் அல்ல என்று. இப்பொழுது அதை எதிர்க்கும் அரசியல்வாதிகள் மதத் தலைவர்கள் அனைவருக்கும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு உள்ளவரை இரண்டு நாடுகளுக்கும் இடையே சுமுகமான ராஜதந்திர இடையூடாட்டம் உள்ளவரை அப்படி ஒரு பாலத்தைக் கட்டவே முடியாது.

அதாவது அப்படி ஒரு பாலத்தை கட்டுவதற்கு இலங்கை உத்தியோகபூர்வமாக அனுமதிக்காது. அவ்வாறு அனுமதிக்கும் அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருக்க முடியாது.

இரண்டு நாடுகளுக்கும் இடையே பகை உண்டாகும்போது மட்டும்தான் வலுக்கட்டாயமாகத்தான் அந்தப் பாலத்தைக் கட்டலாம்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை கிடையாது. எனவே அவரால் அப்படிப்பட்ட துணிகரமான முயற்சிகள் எதையுமே செய்ய முடியாது.

ஆனாலும் அவர் அந்த வாக்குறுதியை இந்தியாவுக்கு வழங்குகிறார். ஏன் வழங்குகிறார்? தான் இந்தியாவைச் சரணடைகிறேன் என்று அவர் காட்டப் பார்க்கிறார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையிலும் இந்தியாவைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் சிந்திக்கின்றார்.

அவரைப் போலவே அந்தப் பாலத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகளும் மதகுருகளும் அது நடக்கக்கூடிய காரியம் அல்ல என்று நன்கு தெரிந்திருந்தும் அதை எதிர்க்கிறார்கள்.

ஏனென்றால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளை அவருக்கு எதிராக திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தான். கர்தினால் மல்கம் ரஞ்சித் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதிகளுக்கு விருப்பமானவற்றைத்தான் பேசுபவர்.

இலங்கை – இந்தியப் பாலம் பற்றிய அவருடைய கருத்து அவருடைய சொந்த கருத்தா அல்லது யாராலாவது தூண்டப்பட்ட கருத்தா என்று பார்க்க வேண்டும்.

கர்தினாலும் ஏனைய அரசியல்வாதிகளும் அவ்வாறு பாலம் கட்டுவதை எதிர்ப்பது என்பது அதன் தர்க்கபூர்வ இறுதி விளைவைக் கருதிக்கூறின் ரணிலுக்கே சாதகமானது.

எப்படியெனில் நாட்டில் எதிர்ப்பு அதிகரிக்கின்றது என்னால் இப்போதைக்கு அதை நிறைவேற்ற முடியாது என்று ரணில் டெல்லிக்குக் கூற முடியும். எனவே மேற்படி அரசியல்வாதிகள் மற்றும் கர்தினால் போன்றவர்களின் கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை.

சீனாவின் மற்றொரு கண்காணிப்புக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர இருப்பதாக செய்திகள் வந்திருக்கும் ஒரு பின்னணியில் சீனாவின் எரிபொருள் விநியோக நிறுவனமாகிய சினோபெக் நாட்டில் உள்ளூர் எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கியிருக்கும் ஒரு காலகட்டத்தில் மேற்படி கூற்றுக்கள் அடுத்தடுத்து வெளிவந்திருக்கின்றன.

எனவே இது விடயத்தில் மிலிந்த மொரகொடவின் உரையையும் உள்நாட்டில் அரசியல்வாதிகளும் மதகுருக்களும் தெரிவிக்கும் கருத்துக்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு படத்துக்குள் வைத்து விளங்கிக் கொள்ள வேண்டும். அந்தப் படம் என்னவென்றால் அவர்கள் அனைவரும் ஒரே சிங்கள பௌத்த சித்தாந்தத்தின் வெவ்வேறு முகங்கள்தான்.

மிலிந்த மொரகொட பாலத்தை கட்டுவோம் என்று கூறுவார். சரத் வீரசேகர, உதய கம்மன் பில, மல்கம் ரஞ்சித் போன்றவர்கள் அதைக் கட்டக்கூடாது என்று சொல்வார்கள். அவர்கள் திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிரான இனவாத அலையை தோற்றுவிப்பார்கள். அதைச் சுட்டிக்காட்டி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் என்னைத் தோற்கடித்து விடுவார்கள்.

எனவே இப்போதைக்கு பாலத்தை கட்டவேண்டாம் என்று ரணில் கேட்பார் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் அப்பாலத்தை கட்டாமல் இருப்பதற்கு வேறு ஒரு காரணத்தை அப்பொழுது கூறுவார்.

ரணில் விக்கிரமசிங்கவையும் ஏனைய தீவிர நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகள் மதகுருக்களையும் இருவேறு அந்தங்களாக விளங்கிக் கொள்ளத் தேவையில்லை. எல்லாருமே ஒரே சிங்கள பௌத்த சிந்தனையின் வெவ்வேறு வெளிப்பாடுகள்தான்.

பாலத்தைக் கட்டும் விடயத்தில் மட்டுமல்ல செந்தில் தொண்டமானை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமித்த விடயத்திலும் அரசாங்கம் தந்திரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது. செந்தில் தொண்டமானை ஆளுநராக நியமித்ததன் பின்னணியில் இந்தியா இருந்ததாக ஊகிக்கப்படுகின்றது.

இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடுதான் செந்தில் தொண்டமானை ஆளுநராக நியமித்தார்கள். ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரை விடவும் ஆளுநருக்கு அதிகாரம் அதிகம். அதனால் தான் தமிழ் மக்கள் மாகாண சபையை எதிர்க்கிறார்கள்.

எனினும் சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலப்பறிப்புக்கு எதிராக அண்மைக்காலங்களில் செந்தில் தொண்டமான் முன்னெடுத்த நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு விகிதமளவுக்குத் தெம்பூட்டும் விதத்தில் அமைந்தன. 

எந்த ஆளுநர் பதவியை தமிழ் மக்கள் எதிர்த்தார்களோ அதே ஆளுநரின் மீது நம்பிக்கை கொள்ளும் ஒரு நிலைமை ஏற்பட்டது. ஆனால் செந்தில் தொண்டமான் தலையிட்ட விடையங்களில் ஒரே ஒரு விடயம்தான் ஒப்பற்றப்பட்டு இருக்கிறது.

அது மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் அத்துமீறிக் குடியேறிய முஸ்லிம்கள் அகற்றப்பட்டமைதான். மற்றும்படி மேச்சல் தரையில் இருந்து பிக்குவையோ சிங்கள விவசாயிகளையோ அகற்ற முடியவில்லை. திருகோணமையில் விகாரைகளைக் கட்ட முற்படும் பிக்குகளை சட்டத்தின் முன் கொண்டு வர முடியவில்லை.

அதாவது தொகுத்துப் பார்த்தால் செந்தில் தொண்டமானின் நடவடிக்கைகளில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு நடவடிக்கைதான் ஒப்பேற்றப்பட்டிருக்கிறது.

ஒருபுறம் இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு செந்தில் தொண்டமானை ஆளுநராக நியமித்துவிட்டு இன்னொருபுறம் பிக்குகள் சட்டத்தை கையில் எடுக்கும்பொழுது அரசாங்கம் அதைத் தடுக்க முடியாதது போல பார்த்துக் கொண்டிருக்கிறது.

செந்தில் தொண்டமானை ஆளுநராக நியமித்த அதே அரசாங்கத்துக்குள்தான் நசீர் முகமட்டும் காணப்படுகிறார்.

அவர் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கிறார். அதே அரசாங்கத்தில்தான் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் உணர்வுகளை ஒருங்கிணைக்கும் வியாழேந்திரன் பிள்ளையான் போன்றவர்களும் காணப்படுகிறார்கள்.

எனவே செந்தில் தொண்டமானின் நியமனத்தின் மூலம் அரசாங்கம் ஒருபுறம் இந்தியாவைத் திருப்திப்படுத்துகின்றது.

இன்னொருபுறம் பௌத்த மத குருக்களை கட்டுப்படுத்தாமல் விடுவதன்மூலம் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிரான செந்தில் தொண்டமானின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறது.

பாலத்தைக் கட்டுவதற்கு வாக்குறுதி வழங்கிவிட்டு அரசியல்வாதிகளையும் மல்கம் ரஞ்சித்தையும் இந்தியாவுக்கு எதிராகப் பேசவிடுவதன் மூலம் பாலத்துக்கு எதிராக சிங்கள பௌத்த உணர்வுகளைத் திரள விடுவதைப் போன்றதே இதுவும். அரசியலில் ஒருவர் மற்றவருக்கு எதிரானவராகக் காணப்படுவார்கள்.

ஆனால் இரு தரப்பினதும் நடவடிக்கைகளின் தொகுக்கப்பட்ட விளைவாக இறுதியிலும் இறுதியாக சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு காப்பாற்றப்பட்டுவிடும்.