ஆண் குழந்தை பிரசவித்த 16 வயது சிறுமி; கணவன் கைது

0
263

மொனராகலையில்  மனைவி ஆண் குழந்தையை பிரசவித்ததை அடுத்து அக்குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவ​மொன்று இடம்பெற்றுள்ளது.

மொனராகலை, கலபெத்த, அம்பலாந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவரே இவ்வாறு குழந்தை ஒன்றை பிரசவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை பொது வைத்தியசாலையில் கடந்த 31ஆம் திகதி குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சிறுமி மொனராகலை அலியாவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரம் வரை கல்வி கற்று பின்னர் தனது தாயுடன் கூலி வேலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 வயது சிறுமி பெற்ற குழந்தை; கணவன் கைது | Father Arrested After Wife Delivers Baby Boy

இளைஞருடன் காதல் தொடர்பு

சிறுமி அம்பலாந்த பிரதேசத்தில் கரும்பு வெட்டச் சென்ற போது ​​அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பெரியவர்களின் சம்மதத்தின் பேரில் மொனராகலை பிரதேசத்தில் உள்ள திருமணப் பதிவாளர் ஒருவரால் சிறுமிக்கு 19 வயது எனக் கூறி சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பின்னர் இருவரும் அம்பலாந்த பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமானபோது அச் சிறுமிக்கு 14 வயது 07 நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய கணவரை கைது செய்து விசாரணைகளை மொனராகலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்