கச்சத்தீவு விவகாரத்தில் நிரந்தர தீர்வே அவசியம்: சித்தார்த்தன் திட்டவட்டம்

0
160

கச்சத்தீவு இலங்கையிடம் இருக்க வேண்டுமா அல்லது இந்தியாவிடம் இருக்க வேண்டுமா என்று இரண்டு நாடுகளும் தெளிவாக ஆராய வேண்டும் என தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆரம்ப காலங்களில் கச்சத்தீவு இந்தியா வசமிருந்தது. 1974 ஆம் ஆண்டுக்கு பின் கச்சத்தீவு ஒப்பந்தப்படி இலங்கைக்கு சொந்தமாக உள்ளது.

கச்சத்தீவை கொடுப்பதும், திரும்ப பெறுவதுமாக இல்லாமல், ஒரு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் என்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக பல ஆண்டுகளாக உள்ளது.

இதேவேளை, கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார்.

“1974ஆம் ஆண்டு இந்திய – இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திதான், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினார்.

தற்போது கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார்” எனவும் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர்களாக ஜெ.ஜெயலலிதா மற்றும் மு.க.கருணாநிதி ஆகியோரும் கச்சத்தீவை இந்தியா மீளப் பெற வேண்டுமென வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்தியாவின் அபிவிருத்தித் திட்டங்கள் அதிகரித்துள்ளதால் எதிர்காலத்தில் கச்சத்தீவு இருநாட்டுக்கும் ஒரு பொதுவான நிலப்பரப்பாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்தியாவின் மூத்த அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.