மொட்டை தலையுடன் மிரட்டும் பகத் பாசில்; பிறந்த நாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்

0
188

“உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்” என்று அழகிய பதிவுடன் நடிகர் பகத் பாசிலுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் பகத் பாசில் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் மாரி செல்வராஜ் தெரிவித்திருக்கும் பிறந்தநாள் வாழ்த்தில் “வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.

ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன்.

மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள்.

இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன்.

அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வாழ்த்தை பார்த்த பலரும் பகிர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதேவேளை, நடிகர் பகத் ஃபாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.