கின்னஸ் சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு நினைவு தின மாரத்தான்!

0
214

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று (06) சென்னையில் இடம்பெற்ற பன்னாட்டு மரதன் ஓட்டப் போட்டியானது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இந்த மரதன் ஓட்டப் போட்டியானது இன்று (06) காலை 4 மணியளவில் மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.

இந்த மரதன் ஓட்டப் போட்டியானது 42.2 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் ஆகிய தூரங்களுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 

அமைச்சர்களான கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் மரதன் ஓட்டப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் .

அதன்படி காலை 4 மணிக்கு முதலாவதாக இடம்பெற்ற 42.2 கிலோ மீட்டர் இற்கான மரதன் ஓட்டப் போட்டியினை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இந்த மரதன் ஓட்டப் போட்டிகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றும் போட்டியாளர்களை ஊக்குவிக்க பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையும் சிறப்பம்சமாகும்.

முதல்வர் பரிசுகளை வழங்கினார்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 9 பிரிவுகளின் கீழ் சுமார் 10 லட்சம் ருபாய் மதிப்பிலான பரிசுகளை தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.

அதுமாத்திரமல்லாமல் லண்டனில் இருந்து வந்த கின்னஸ் குழுவினர் நீண்டதூர ஓட்டப்பந்தயம் என்ற பிரிவில் இந்த மரதன் ஓட்டப் போட்டிகளினை கின்னஸ் சாதனையாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.