இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே நிலவியதாக சொல்லப்படும் பண்டையகால தொடர்புகள் பற்றி கண்டறிய இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளன Sri Lanka China Connection
இரு நாடுகளின் தொல்லியல் திணைக்களங்கள் இணைந்து யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டில் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
இலங்கைக்கும் சீனாவிற்கும் 1200 வருடங்களுக்கு முன்னர் தொடர்புகள் இருந்ததாக கூறி, சீன அரசினால் கடந்த 1980 ஆண்டு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கப்பல் துறை பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த ஆய்வில் கப்பல் பாகங்கள், நாணயங்கள், சமய வழிபாட்டுக்கான பொருட்கள் உள்ளிட்ட பல சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. ஆனாலும் இலங்கையில் தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்த அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன
இந்நிலையில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பண்டையகால தொடர்புகள் இருந்ததற்கான சான்றுப் பொருட்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டிருப்பதால் அவை தொடர்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென சீன அரசு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டி கப்பல் துறைப் பகுதியில் இரு நாடுகளினதும் தொல்பொருள் திணைக்கள நிபுணர்கள் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை, கப்பல் துறைப் பகுதியில் ஏற்கனவே மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களையும் தற்போது நடைபெறுகின்ற ஆய்வுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள பொருட்களையும் கொண்டு பார்க்கையில் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியான தொடர்புகள் இருந்திருக்கலாமென்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.