வெளுத்து விளாசிய இசான் கிசான்! : முதன்முறையாக நான்காவது இடத்துக்கு முன்னேறியது மும்பை!

0
565
kolkata knight riders vs mumbai indians 2018

(kolkata knight riders vs mumbai indians 2018)

ஐ.பி.எல். தொடரில் தடுமாறி வந்த மும்பை அணி நேற்றைய போட்டியின் வெற்றியின் ஊடாக முதன்முறையாக புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மிகுதி உள்ள ஒவ்வொரு போட்டிகளின் வெற்றியும் அவசியம் என்ற நிலையில் கொல்கத்தா அணியை நேற்று எதிர்கொண்ட மும்பை அணி 102 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி, துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மும்பை அணிக்கு வழங்கியது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய மும்பை அணி ஆரம்பத்தில் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

மும்பை அணி 9 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுகளை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. எனினும் அடுத்து களமிறங்கிய இசான் கிசான் அதிரடியை ஆரம்பித்தார்.

வெறும் 17 பந்துகளுக்கு அரைச்சதத்தை கடந்த இவர், 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 21 பந்துகளுக்கு 62 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ரோஹித் சர்மா 31 பந்துகளுக்கு 36 ஓட்டங்களை நிதானமாக பெற்றுக்கொடுக்க, அடுத்து களமிறங்கிய பென் கட்டிங் 9 பந்துகளுக்கு 24 ஓட்டங்களை விளாச, மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் சவ்லா 48 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கட்டுகளை பறிகொடுத்து, 108 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

கிரிஸ் லின் மற்றும் நிதிஷ் ரானா ஆகியோர் தலா 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற மும்பை அணி 10 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலின் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், கொல்கத்தா அணி 5வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

<<Tamil News Group websites>>