யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு : நாட்டு மக்களே அவதானம்..!

0
1742
jaffna hindu college student dead

(jaffna hindu college student dead)
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக யாழ். இந்துக் கல்லூரியின் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி கற்கும் 18 வயதான சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவன் தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு அங்கிருந்து மதியவேளை, உறவினர்களைப் பார்ப்பதற்காக சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் உள்ள காங்கேசன்துறைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

மிகவும் சோர்வடைந்திருந்த அவர், அங்கு தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மென்பானமும் அருந்தியுள்ளார். இதன்பின் தலைசுற்றுவதாகக் கூறி வாந்தி எடுத்துள்ளார்.
இதனையடுத்து அவரை உறவினர்கள் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவும் உயர் வெப்ப காலநிலை காரணமாக வயது வந்தவர்கள் தினமும் இரண்டு லீற்றர் நீர் அருந்துவது உகந்தது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நீர் அதிகளவில் அருந்துவது முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், நீர் அருந்தும் போது எலுமிச்சம் பழம் அல்லது வெள்ளரிக்காய் ஆகியவற்றை துண்டுகளாக வெட்டி அருந்தும் நீரில் இட்டு அருந்தினால் மிகவும் நன்று என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான அதிக வெப்ப காலநிலை நிலவும் போது நீர் அதிகமாக அருந்தாவிட்டால் தலைவலி, தலைச்சுற்று, உடல் வேதனை, உடலில் நீர் குறைபாடு போன்ற நோய்களால் பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, இதனைக் கவனத்திற்கொண்டு நீரும் கூடுதலான இளநீர், தோடம்பழச்சாறு போன்ற பானங்கள் குடிப்பது சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று, சிறு பிள்ளைகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை லீற்றர் நீர் குடிக்க கொடுக்க வேண்டும் என்றும் வெப்பம் அதிகமாகவுள்ள இந்த நாட்களில் அடிக்கடி குளிப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வெளியே பயணிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் இயலும் வரை குடை அல்லது தொப்பி அணிந்து செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வெள்ளை நிற உடையணிந்து செல்ல வேண்டும் என்றும் இந்த உயர் வெப்ப நிலை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை