பாரிய மண்சரிவு அபாயம் தொடர்பில் வௌியான தகவல்

0
49

எல்ல – வெல்லவாய வீதியில் கரந்தகொல்ல பிரதேசத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த வாரம் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டத்தின் சுரங்கப்பாதையில் நீரை நிரப்பியதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதா என்பது நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலை ஆராய்ச்சி மூலம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

எல்ல – கரந்தகொல்ல பிரதேசத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மலித்தகொல்ல எனும் சாய்வான பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் மண்சரிவு ஏற்படும் நிலை காணப்படுவதால் அப்பகுதி மக்களிடையே இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள பிரதேசத்தில் நீர் வழிந்தோடும் விதம் மற்றும் சேறு மண் படிந்துள்ள விதத்தையும் அத தெரண நேற்று (26) செய்தியாக வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், புவியியல் இருப்பிடத்தின்படி, எல்ல – கரந்தகொல்ல பிரதேசமானது உமாஓயா திட்டத்தின் கீழ் டயரம்பா நீர்த்தேக்கத்திற்கு கீழே சுமார் 2.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் அவ்விடத்தில் மண்சரிவுகள் அவ்வப்போது இடம்பெற்று வருவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு பெய்த கனமழையால், சுமார் 15 ஏக்கர் மலை இடிந்து வீழ்ந்து கீழே தள்ளப்பட்டுள்ளது.

தளத்தின் ஒழுங்கற்ற நிலப் பயன்பாட்டுத் தன்மை மற்றும் அப்பகுதியின் மேற்பரப்பு மற்றும் உள் வடிகால் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான காரணிகளால் மீண்டும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் மாறாமல் இருந்தால், அதற்கு கீழே செல்லும் எல்ல-வெல்லவாய பிரதான வீதியும் பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.