கணவருக்கு எதிராக மனைவி வேட்புமனு தாக்கல்: இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை

0
34

அரசியலைப் பொறுத்தவரை யாரும் யாருக்கு நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பது எழுதப்படாத விதி. இதற்கமைய கணவரை எதிர்த்து மனைவி வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடவடிக்கை கடந்த 19 ஆம் திகதி 102 தொகுதிகளில் நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடவடிக்கை 89 தொகுதிகளில் நாளை (26) நடைபெறவுள்ளது. இதில் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா தொகுதியில் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி நான்காம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் இன்று (25) வரை வழங்கப்பட்டிருந்தது.

அதேபோன்று வேட்புமனுவை மீளப்பெறுவதற்கான இறுதி தினமாக எதிர்வரும் 29 ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இட்டாவா மக்களவைத் தொகுதியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்சங்கர் கத்தேரியா களமிறக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவரை எதிர்த்து அவரது மனைவியான மிர்துளா கத்தேரியாவும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் இட்டாவா தொகுதியில் சுயேட்சையாகக் களமிறங்கியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போதும் இதேபோன்று மிர்துளா கத்தேரியா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

பின்னர் தனது வேட்பு மனுவை மீளப்பெற்ற மிர்துளா கத்தேரியா இந்த முறை தனது வேட்பு மனுவை மீளப் பெறப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றார்.

அத்துடன் இந்தியா ஒரு ஜனநாயக நாடு எனவும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனவும் மிர்துளா கத்தேரியா தெரிவித்துள்ளார்.