இன்று உலக புவி தினம்

0
49

1990-ம் ஆண்டில் ஐ.நா சபையால் ‘புவி தினம்’ அங்கீகரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கி நாகரிகம் வளர்த்த நாம் இன்று மீண்டும் மரங்களை வளர்த்தால்தான் மகிழ்ச்சி நீடிக்கும் என உணரத் தொடங்கி இருக்கிறோம். காடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சமவெளிகள், மிகப்பெரிய நிலப்பரப்பு என அனைத்தும் தன்னுள் அடக்கி உயிரின வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்களைத் தருவது நம் பூமி. மனித தேவையின் அத்தியாவசியம் மற்றும் அதிகப்படியான பொருள்களையும் வளங்களையும் வழங்கி இன்றைய நிலைமையில் எதுவும் இல்லாமல் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் எங்கு பார்த்தாலும் இயற்கை பேரிடர்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மக்கள் தொகை பெருக்கம், தொழில்மயமாதல் எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். நம்மை மீறி ஒரு குப்பையைக் கீழே போட்டாலும்கூட அது பூமிக்கு செய்யும் தீமைதான். இன்று பூமி இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் நம் வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் வேண்டுமானால் வளர்ந்திருக்கலாம். ஆனால் கண்டுபிடிப்புகள் எப்போது வேண்டுமானாலும் அழிவைத் தரலாம்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் பிரபஞ்சம் என்னும் பேரதிசயம் நமக்கு எத்தனையோ நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்திலேயே உயிர்கள் வாழத் தகுதியானதான கண்டறியப்பட்ட ஒரே கிரகம் நாம் வாழும் புவி தான். இந்த பிவி சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது பெரிய கிரகமாகும். புவியின் உள்பகுதி சுமார் 1,200 கிமீ ஆரம் கொண்ட திடமான பந்தாக உள்ளது. புவின் மேற்பரப்பு 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 விழுக்காடு நிலத்தில் மரங்கள், மலைகள், ஆறுகள் போக மீதமுள்ள இடத்தில் நாம் வாழ்கிறோம். சூரியக் குடும்பத்தில் தீவிர டெக்டோனிக் தட்டுகளைக் கொண்ட ஒரே கிரகம் புவி இந்த தட்டுகளின் இயக்கம் தான் நமது கிரகத்தின் மேற்பரப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதற்குக் காரணம்.

இந்த புவியின் கட்டமைப்பு என்பது மனிதன் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் வாழக்கூடிய வகையில் மிக சிரத்தையுடன் இயற்கை வரமாய் உருவானதாகும். எந்தெந்த உயிரினம் எங்கெங்கே வாழுதல் நலம் என்று தானாகவே பூமி ஏற்படுத்திய வரைமுறைதான் மனிதன் நாட்டிலும் விலங்குகள் காட்டிலும் வாழும்படியாக காலப்போக்கில் மாறியது. ஆனால் மனிதனின் பேராசையோ போதும் என்ற மனமின்றி இயற்கையை அழித்து செயற்கை பொருட்களை உருவாக்கத் தொடங்கியது.அதன் ஒரு தொடக்கமாகத்தான் காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக் கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும் அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இருநூறு முதல் இரண்டாயிரம் உயிரினங்கள் அழிந்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இதுவே பத்தாயிரம் வரைகூட உயரக்கூடுமாம். சென்ற நூற்றாண்டில் சர்வ சாதாரணமாக உயிர் வாழ்ந்த புலி இனங்கள் கூட இன்று வேகமாக அழிந்து வரும் உயிரினங்களில் சேர்ந்துகொண்டது நம் கண் முன்னே நடந்த துயரமாகும். 2050-க்குள் முப்பதிலிருந்து ஐம்பது சதவீதம் உயிரினங்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடைபெற்று கொள்ளுமாம். சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அன்றாடம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவி இனங்கள் இன்று முற்றிலும் காணாமல் போனது இதற்கு பெரும் உதாரணமாகும்.

தற்போது பூமியில் சுமார் 12 லட்சம் பட்டியலிடப்பட்ட உயிரினங்கள் உள்ளன. இது மொத்தத்தில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே என்று கருதப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் விஞ்ஞானிகளின் கணிப்பின் படி பூமியில் 87 லட்சம் இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது. வேகமாக அழிந்து வரும் விலங்குகளில் சில அரிய வகை கொரில்லாக்கள், கடல் ஆமைகள், ஒரங்குட்டான்கள், காட்டு யானைகள், காண்டாமிருகங்களும் அடக்கம். இவ்வகை உயிரினங்களின் மரபணுக்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் பூமியில் நிலைப்பெற்று வாழ்ந்தவையாகும். மீண்டும் ஒரு புலியையோ, யானையையோ நம் அடுத்த தலைமுறை அறியாது. ஒரு இனமே இவ்வாறு சுவடின்றி அழிந்து போவது பூமிக்கு ஏற்பட்ட பெரும் சாபக்கேடாகும்.

இப்படியாக நம் வாழும் புவி தோராயமாக 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது எனக் கூறப்படுகிறது. இ பூமியைப் பெருமைப்படுத்தும் நாள் தான் உலக புவி நாள். 1969 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் இயற்கை ஆர்வலர் ஜான் மெக்கானல் புவி நாள் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் குறித்த கருத்தை முன்வைத்தார். தொடர்ந்து அமெரிக்க நாட்டு செனட் உறுப்பினராக இருந்து கெய்லார்ட் நெல்சன் ஏப்ரல் 22 ஆம் நாளன்று சுற்றுச்சூழல் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தினார். அதற்குப் புவி நாள் விழிப்புணர்வு என்று பெயரும் வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் நாள் அன்னை புவி நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கி நாகரிகம் வளர்த்த நாம் இன்று மீண்டும் மரங்களை வளர்த்தால்தான் மகிழ்ச்சி நீடிக்கும் என உணரத் தொடங்கி இருக்கிறோம். காடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சமவெளிகள், மிகப்பெரிய நிலப்பரப்பு என அனைத்தும் தன்னுள் அடக்கி உயிரின வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்களைத் தருவது நம் பூமி. மனித தேவையின் அத்தியாவசியம் மற்றும் அதிகப்படியான பொருள்களையும், வளங்களையும் வழங்கி இன்றைய நிலைமையில் எதுவும் இல்லாமல் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் எங்கு பார்த்தாலும் இயற்கை பேரிடர்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மக்கள் தொகை பெருக்கம், தொழில்மயமாதல் எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

அந்த வகையில் உலகம் வெப்பமயமாகுதல், காற்று மாசு, காடழிப்பு, பசுமைக் குடில் விளைவுகள், தண்ணீர் பஞ்சம் என்று புவி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும்இந்நிலையில் புவியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது. முடிந்தவரை காற்று மாசை தடுத்து அதிக அளவில் மரங்கள் நட்டு, தண்ணீர் சேமிப்பு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்தி இயற்கையை அதன் வழியிலேயே பாதுகாத்தால் மட்டுமே மனிதனால் தன் அடுத்த தலைமுறைக்கு தன் முன்னோரும் தானும் அனுபவித்த இயற்கை வளங்களை பரிசாய் தரமுடியும். அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை’ என்கிறது திருக்குறள். அன்னை மிகப் பொறுமை காக்கிறாள். அதை அளவுக்கதிகமாக சோதித்தால் ஆபத்து அவளுக்கல்ல, நமக்குதான்.

இந்நாளில் சில எளிமையான ஆலோசனைகள்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்த்து விடலாம்.

மரங்களை வெட்டாமல் இருக்கலாம். முடிந்தால் ஒரு மரத்தையாவது நடுங்கள்.

மிக அவசியமான விஷயங்களை தவிர மற்றவற்றுக்கு பூமியைத் தோண்ட வேண்டாம்.

வாகனம் நச்சுப் புகையை வெளியிட்டு கொண்டிருந்தாள் அதை உடனே சரி செய்யுங்கள்.

உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு பூமியைக் காப்பது குறித்த விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.

தண்ணீரையும் மின்சாரத்தையும் சிறிதும் வீணாக்க வேண்டாம்.

வேண்டாத பொருட்களை, முக்கியமாக ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக் கூடிய பொருட்களை, வாங்குவதை மிகவும் குறைத்துக் கொள்ளுங்கள்.

குண்டு பல்புக்கு பதிலாக எல்இடி பல்புகளைப் பயன்படுத்துங்கள்

அருகில் உள்ள இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்லுங்கள்.

இவற்றையெல்லாம் செய்தால் பூமி கொஞ்சம் கொஞ்சமாக ஆறும். அதுதான் உண்மையான சர்வதேச புவி தினமாக இருக்கும்.