மணிப்பூரின் 11 இடங்களில் மீண்டும் தேர்தலை நடத்தும் இந்தியா: மோடி 3வது முறையாக வெற்றி பெற வாய்ப்பு

0
30

உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தும் இந்தியா, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து 11 இடங்களில் நாளை (22) மீண்டும் வாக்களிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.

மணிப்பூரின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 11 இடங்களில் கடந்த 19 ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்குப்பதிவு நடவடிக்கை செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவை நடத்துமாறு இந்தியத் தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்திய மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்தலில் வளர்ச்சி, நலன்புரி மற்றும் இந்து தேசியவாதம் போன்ற பிரச்சினைகளின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மணிப்பூரில் 47 வாக்களிப்பு மையங்களில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டி மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரியது.

இதற்கமைய இந்தியத் தேர்தல் ஆணையகத்தின் உத்தரவுக்கமைய மணிப்பூரின் 11 இடங்களில் மீண்டும் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடவடிக்கை முடிவடைந்த நிலையில் தேர்தல் ஆணையகத்தின் புள்ளிவிவரங்களின் படி 60 வீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.