வரலாறு படைக்கப்பட்டது: கென்யாவில் முதல் பெண் விமானப்படை பிரதானி நியமனம்

0
56

கென்யா நாட்டு விமாப் படையின் பிரதானியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஃபாத்துமா கைதி அகமது இவ்வாறு அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனத்தை ஜனாதிபதி வில்லியம் ருட்டோ வழங்கிவைத்துள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் விமானப் படையின் பிரதானி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மேஜர் ஜெனரல் ஃபாத்துமா நியமிக்கப்பட்டுள்ளார்.

கென்யாவின் இராணுவ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இது கருதப்படுகின்றது. இந்த நியமனம் மூலம் மேஜர் ஜெனரல் ஃபதுமா கைதி அகமது கென்யாவின் விமானப்படைக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற அங்கிகாரத்தைப் பெற்றுள்ளார்.

1965 ஆம் ஆண்டு பிறந்த மேஜர் ஜெனரல் ஃபாத்துமா கைதி அகமது நைரோபியில் உள்ள ஆகா கான் உயர்நிலைப் பாடசாலையில் படித்தார்.

2000 ஆம் ஆண்டு ஜூலை மாத்தில் தேசிய பாதுகாப்புக் கல்லூரி மற்றும் பாதுகாப்புப் பணியாளர் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். ஸ்ட்ராத்மோர் பல்கலைக்கழகக் கல்லூரியில் நிர்வாகத்தில் டிப்ளோமாவும் பெற்றார்.

1984 ஆம் ஆண்டு கென்யா இராணுவ அகாடமியில் அதிகாரி கேடட்டாக இணைந்து கொண்டார். அவரது பயிற்சி முடிந்ததும் அவர் 1985 இல் கென்ய மகளிர் சேவைப் படையில் இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.