நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0
72

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக கையாண்டு, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதால் அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது அனைத்து தரப்பினரின் கடமை எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

“கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், நாம் கிழக்கு மகாணத்தில் தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 30 வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாகாணம் என்பதால் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணம் வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. எனவே இந்த மாகாணத்திற்குரிய மூன்று மாவட்டங்களினதும் வளர்ச்சியில் அதிக கவனம் எடுக்குமாறு ஜனாதிபதி எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்காக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள வளங்கள் தொடர்பில் நாம் தற்போது கண்டறிந்துள்ளோம். உதாரணமாக இறால் வளர்ப்பு, கனிய வளங்கள், துறைமுகம், விமான நிலையம், நீர் வளம், சுற்றுலாத் துறை மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை எவ்வாறு நாம் அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். எனவே இவற்றை மேம்படுத்துவதன் மூலம் எமது நாட்டின் கடன்களை அடைப்பதற்கு கிழக்கு மாகாணம் மாத்திரம் போதுமானது என்பதைக் கூற வேண்டும்.

அந்தளவு வளங்கள் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றன. அவற்றை முறையாக அபிவிருத்தி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைத் திருப்பி செலுத்தும்போது கிழக்கு மாகாணம் அதற்கு நிதிப் பங்களிப்பை வழங்க முடியும் என்று நான் நினைக்கின்றேன்.

எதிர்காலத்தில் முழு நாட்டுக்கும் பொருளாதார பங்களிப்பை வழங்கும் முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையைப் பொருத்தவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன.

பொதுவாக இரண்டு வருடங்களில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே ஒரு வருடம் தாமதமாகி உள்ளது. இதற்காக நாம் சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளோம். தற்போது பெருந்தோட்டக் கம்பனிகள் அவர்களின் முன்மொழிவுகளை வழங்கியுள்ளன. பெருந்தோட்டத் தொழில் என்பது அந்நியச் செலாவணியுடன் தொடர்புபட்டது. எனவே டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கு ஏற்பவும் உள்நாட்டு வாழ்க்கை செலவினைப் பொருத்துமே சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும். விரைவில் மலையக மக்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்.