நான் புலம்பெயர் மக்களுக்கு எதிரானவன் அல்ல, இதுவே எனது நிலைப்பாடு – அலி சப்ரி

0
88

அனைத்து புலம்பெயர் அமைப்புக்களையும் நபர்களையும் நான் எதிர்ப்பதில்லை என அலி சப்ரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனி இராஜ்ஜியம் கேட்டு போராடும் புலம்பெயர் அமைப்புக்களை மாத்திரம் தான் எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இதற்கான இடைக்கால செயலகம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

சமஷ்டி முறை

இதன் மூலம், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுடனும் அரசியல்வாதிகளுடனும் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். சமஷ்டி முறை தொடர்பில் தமிழ் மக்கள் போராடலாம். அதற்கான உரிமை தமிழர்களுக்கு உள்ளது.

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகத்தான் நாமும் பேசிக் கொண்டிருக்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதி அல்ல என நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

எனினும், அவ்வாறு இல்லை. அவர்களும் இந்த அரசாங்கத்தின் ஒரு அங்கம். எனக்கும் எனது தந்தைக்கும் தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் கடந்த 1983 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்கள். இதற்கு எமக்கும் தீர்வு வேண்டும்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளில், 6 ஆயிரத்து 50 பேர் தங்கள் நேசித்தவர்களை இழந்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த 2000 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் வடக்கில் மாத்திரம் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கும் ஒரு நிவாரணம் வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

இது உண்மையான தீர்வாக அமையாவிட்டாலும், நாம் இதனை ஆரம்பிக்க வேண்டும். இதுதான் என்னுடைய நிலைப்பாடு. அத்துடன், இதற்கான ஆலோசனைகளை வழங்க தமிழ் பிரதிநிதிகள் முன்வர வேண்டும். நடைமுறைப்படுத்தக்கூடிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.