உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியம் பெற பெண்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள்

0
50

 சுய ஒழுக்கம் என்பதும் சுய பாதுகாப்பு என்பது, பாலின பாகுபாடுகளை தாண்டி அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.

பெண்கள் பலர், தன்னை தன் வாழ்க்கையில் முதன்மை படுத்திக்கொள்ளாமல், பிறருக்கு பெரிய இடத்தை கொடுப்பர்.

இதனால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்கள் படும் துயரம் ஏராளம்.

அப்படி தன்னை தானே நன்றாக பார்த்துக்கொள்பவர்களும் பல சமயங்களில் “தான் ஒரு சுய நலவாதியோ?” என்ற எண்ணத்தால் ஆட்கொள்ளப்படுகின்றனர்.

தினசரி உடற்பயிற்சி

தினமும் காலையில் அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நன்மை பயக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த பயிற்சி, யோகாசனம் செய்வதாக இருக்கலாம், உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதாக இருக்கலாம்.

அல்லது உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டால் கண்டிப்பாக மன ரீதியாகவும் பலம் பெற முடியும் என மருத்துவர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

சரும பராமரிப்பு

வெயிலில் செல்லும் போது சன்ஸ்க்ரீன் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே பலருக்கு தெரியாது.

அப்படி செய்வதால் சரும புற்றுநோயை தவிர்க்கலாம். பெண்கள், தங்களது சருமத்தை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் .

முகம் கழுவுவது, மாய்ஸ்டரைஸ் செய்வது, ஃபேஸ் பேக் போடுவது ஆகியவை இதில் அடங்கும்.

முகத்திற்கு உகந்த பொருட்களை மட்டும் வாங்கி பயன்படுத்தவும்.

நல்ல தூக்கம்

Happy woman sleeping in the bed in the night at home

குடும்பத்திற்காக காலையில் எழுந்து ஓயாமல் உழைத்து பின்பு அலுவலகத்திற்கு சென்று அனைத்து வேலைகளையும் முடித்து, வீட்டில் உள்ள அனைவரும் உறங்கிய பின்பு பெண்கள் உறங்க செல்வதால் அவர்களுக்கு அவார்டு ஒன்னும் கிடைக்கப்போவதில்லை.

சமுதாயத்தில் “இப்படியெல்லாம் செய்தால்தான் நீ நல்ல குடும்ப பெண்” என்ற தவறான புரிதலை பெண்களிடம் புகுத்தி வைத்துள்ளனர்.

எனவே, உங்கள் உடலையும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் நன்றாக பார்த்துக்கொள்ள, தினசரி 7 முதல் 9 மணி நேரம் நன்றாக தூங்குவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

ஹெல்தி ஸ்னாக்ஸ்

வீட்டில் மிச்சமாகும் உணவுகளை “அய்யயோ..வேஸ்டா போயிருமே..” என்ற எண்ணத்தில் பல பெண்கள் சாப்பிடுவதுண்டு.

அவர்கள், நம்முடையதும் வெறும் வயிறுதான், குப்பைக்கூடை அல்ல என்பதை உணர வேண்டும்.

எனவே, பிறருக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க விரும்புகின்றனரோ, அதே மாதிரியான உணவுகளை தானும் உண்ண வேண்டும்.

அப்படி, அவர்கள் தங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டியவை, ஹெல்தியான ஸ்னாக்ஸ் வகைகளாகும்.

உலர்பழங்கள், காய்கறிகளினால் ஆன சாலட், சர்க்கரை கலக்காத பானங்கள் உள்ளிட்ட பல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளுள் அடங்கும்.

மன நலன்

உடல் பலமும், உடல் நலனும் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியமானது, மன நலன்.

மனதளவில் உறுதியுடன் இருந்தால் மட்டுமே கண்டிப்பாக ஒருவரால் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் சரியாக பயணிக்க முடியும்.

அப்படி மன நலனை நன்றாக பாதுகாத்துக்கொள்ள அனைவரும் பின்பற்ற வேண்டிய விஷயங்களில் ஒன்று, தினமும் ஜர்னல் எழுதுவது.

டைரி எழுதும் பழக்கத்திற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

தினசரி இதை எழுத வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

மனதில் சஞ்சலம் தோன்றும் போதும், யாருடனேனும் பேச வேண்டும் போல தோன்றினாலும் இதை செய்யலாம்.

பொருளாதார சுதந்திரம்

பல பெண்மணிகள், இல்லத்தரசிகளாகவும், வேலை பார்த்தாலும் அதை கணவன்மார்களிடம் கொடுக்கும் பெண்களாகவும் உள்ளனர்.

எதை செய்தாலும் அது அவரவர் விருப்பம் என்றாலும், உங்களுக்கான தனி சேமிப்பும் இருக்க வேண்டும்.

பொருளாதார ரீதியாக, ஒருவரை சார்ந்து இருப்பதில் தவறில்லை என்றாலும், தனக்கென தனி சேமிப்பு வைத்துக்கொள்வதிலும் தவறில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.