இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை: போர் 2025 வரை நீடிக்கும் – பெஞ்சமின் நெதன்யாகு

0
117

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையில் நடந்து வரும் போரை நிறுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை என பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தராக செயற்பட்டு வரும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

எனினும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தாம் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் காலம் சாதகமாக இல்லை எனவும் கத்தார் பிரதமர் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்த தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். மனிதாபிமான பிரச்சினைகளை கையாள்வதில் சில சிக்கல்கள் இருப்பதை காண முடிகிறது எனவும் அல் தானி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் வேளையிலும் காஸாவின் ராஃபா பகுதியில் இராணுவம் மேற்கொண்டு வரும் தரைவழி தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அறிவித்துள்ளார்.

அதேவேளை போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு இஸ்ரேலே காரணம் என ஹமாஸ் கூறியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவற்காக அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இருத்தரப்பின் பிரதிநிதிகளுடன் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கோரிக்கைக்கு அமைய இஸ்ரேல், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான தனது பிரதிநிதிகளை கொய்ரோவுக்கு அனுப்பியதாகவும் ஹமாஸின் கோரிக்கைகளை ஆராயும் போது அவர்கள் கனவு உலகில் இருப்பதாகவும் இதனால் இஸ்ரேல் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை எனவும் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தெரிவித்துள்ளார்.

மேலும் பாலஸ்தீனியர்களுக்கு தனிநாட்டை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களுக்கு செவிசாய்க்க போவதில்லை.

எனினும் இருநாடுகள் தொடர்பான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித நிபந்தனைகளும் இன்றி சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை மூலமே சாத்தியமாகும் எனவும் நெத்தன்யாஹூ கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஹமாஸ் போராளிகளின் பிடியில் உள்ள 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் அனுசரணையுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.

எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் நடுவர்களாக இருந்து சண்டைநிறுத்தம் 100க்கும் மேலான பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதேவேளை இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என நெத்தன்யாஹூ, காஸா எல்லையில் வசிக்கும் சமூகங்களின் தலைவர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.