முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கேட்ட ஞானசாரதேரர்: வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் திடீர் அறிவிப்பு!

0
119

இலங்கைதீவில் வாழும் முஸ்லிம் சமூகத்திடம் ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேரர் அறிவித்துள்ளார்.

பொதுப்பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசாரதேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்திருந்திருந்தன.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி ஆலயம் ஒன்றில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்து அந்த சமூகத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்றும் 8 வருடங்களின் பின்னர் அது பற்றி உணர்ந்து கொள்வதாகவும் ஞானசாரதேரர் கூறுகின்றார்.

வழக்கின் இறுதி தீர்ப்பில் தேரருக்கு நீதிமன்றினால் கடும் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஞானசார தேரர் மன்னிப்பு கோரியுள்ளதுடன் கவலையும் வெளியிட்டுள்ளார்.

2009க்கு பின்னரான சூழலில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளிலும் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலும் தீவிரமான பௌத்தமயமாக்கள் செயற்பாடுகளுக்கு தேரர் மூலகாரணமாக இருந்தார்.

அத்துடன் அச்சுறுத்தல், கொலை மிரட்டல் போன்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டமைக்காக பொலிஸாரினால் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.