பொது முடக்கமும் போராட்டங்களும் யாரால் யாருக்காக?: எழுந்த விமர்சனங்கள்

0
128

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதியில் பொது முடக்கமும், எதிர்ப்பு போராட்டங்களும் நடத்தப்பட்டமை யாரால் யாருக்காக என்ற விமர்சனங்கள், கேள்விகளை எழுப்பியுள்ளன.

யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பொது அழைப்பில் பொது முடக்கம் நடைபெற்றது. தமிழ்த்தேசிய கட்சிகள் அனைத்தும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.

ஆனால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டங்கள் ஒருமித்த குரலில் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல. மாறாக ஒவ்வொரு போராட்டங்களும் ஆங்காங்கே அவ்வப்போது எழுந்தமானதாக நடைபெற்றதாகவே தெரிகிறது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தாக்கப்பட்டிருக்கின்றார். இளைஞர் ஒருவரும் தாக்கப்பட்டிருந்தார். பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால், இதுவரை எந்தவொரு தமிழ்த்தேசிய கட்சியும் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. சிவில் சமூக அமைப்புகள் கூட உடனடியாக கண்டனம் வெளியிடவில்லை.

மட்டக்களப்பில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்துகொண்டார். ஆனால், தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் போராட்டத்தில் பங்குபற்றவில்லை.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனியான முறையில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகள் ஆங்காங்கே கலந்துகொண்டிருந்த போதும் முழுமையான பங்களிப்பாக அது தெரியவில்லை.

ஆகவே, பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பை ஏற்று பொது முடக்கம் இடம்பெற்றாலும் நடைபெற்ற போராட்டங்கள் ஒப்பாசாரத்துக்காகவும், தேர்தலில் வெற்றிபெறுவதற்காக வாக்கு வங்கிகளை அதிகரிக்கும் வியூகத்திலும் நடத்தப்பட்டதாக கருத இடமுண்டு.

தமிழ்த்தேசிய கட்சிகள் தனியே தேர்தல் கட்சிகள்தான். தமிழ் மக்களுக்கான அரசியல் விடுதலையை பெற்றுக்கொடுக்கும் பொதுச் சிந்தனை இவர்களிடம் இல்லை என்பதை நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போராட்டங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளன.

தற்போதைய புவிசார் அரசியல் ஒழுங்கில் குழப்பமடைந்து வல்லரசு நாடுகளிடையே போட்டிகளும் அதிகரித்துள்ள சூழலில், அதனை கன கச்சிதமாக சிங்கள அரசியல் கட்சித்தலைவர்கள் பயன்படுத்தி, இலங்கை அரசு என்ற ஒற்றையாட்சி கட்டமைப்பை பலப்படுத்தி வருகின்றன.

ஆனால், தமிழ் தரப்பு எந்தவொரு நுட்பங்களையும் கையாளாமல் வெறுமனே தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற கதிரையை கைப்பற்றும் நோக்குடனே செயற்படுகின்றன.

வெவ்வேறு கட்சிகளாக செயற்பட்டாலும் தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தில் ஒருமித்த குரலில் செயற்படுவதற்கு தயங்குவதற்கு காரணம் என்ன?