இஸ்ரேல் தாக்குதலில் தொடர்ந்தும் பலியாகும் பொது மக்கள்: ஐ.நா கவலை

0
146

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பொது மக்கள் தொடர்ந்தும் பலியாக வருவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இருதரப்புக்கும் இடையில் ஆரம்பித்த யுத்தம் தொடர்ந்தும் நீடிக்கிறது. போர் எப்போது முடிவடையும் தெரியவில்லை.

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிகிறது.

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்து 057 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அதாவது காஸாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காஸாவில் போதிய உணவு மற்றும் தண்ணீரின்றி மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

சுமார் 5 லட்சம் பேருக்கு உணவு கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

போரினால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். காஸாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 390 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 734 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு நாட்களாக காஸாவின் பல பகுதிகளில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.