கனடாவுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா; கனடா உயர் அதிகாரி வெளியேற்றம்!

0
269

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா – இந்தியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஹர்தீபை இந்திய அரசு கொன்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.

முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என இந்தியா கடனாவின் கருத்தை நிராகரித்துள்ளது. இந்திய அதிகாரியை வெளியேற்றியதற்கு பதிலடியாக கனடா உயர் அதிகாரியை இந்திய அரசு வெளியேற்றியுள்ளது.

இந்தியாவில் தேடப்பட்டு வந்த ஹர்தீப் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18 ஆம் திகதி கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பல ஆண்டுகளாக நிஜ்ஜாரின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து இந்தியா தனது கவலைகளை பலமுறை கனடாவிடம் தெரிவித்தது. காலிஸ்தான் அமைப்பு இந்தியாவிற்கு எதிராக போஸ்டர் ஓட்டுதல், போராட்டம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது “ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியர்கள் நடத்தி இருக்கலாம்.

கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறினர்.

கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்“ – இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பிரகாரம் இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது. இது குறித்து இந்திய மத்திய அரசு கூறியிருப்பதாவது, கனடாவில் நடக்கும் இந்தியாவிற்கு எதிரான செயல்களில் சட்ட ரீதியிலான நடவடிக்கை தேவை.

கனடா அரசு எடுத்த நடவடிக்கை தவறானது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். அதைப் பற்றியே இப்போது பேச வேண்டும்.

இந்த விஷயத்தில் கனடா அரசின் செயலற்ற தன்மை கவலையாக உள்ளது. இவ்வாறு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே கனடா உயர் அதிகாரியை இந்திய மத்திய அரசு வெளியேற்றியுள்ளது. இதனால் இருநாட்டுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் முற்றியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.