ஓணம் பண்டிகை சிறப்புக்கள்..

0
465

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் தங்களது பண்டிகைகளை வெகுவிமர்சையாக கொண்டாடுவார்கள்.

அதில் தமிழ் மக்களுக்கு எப்படி பொங்கள் சிறப்பு வாய்ந்ததாக இருகின்றதோ. அதுப்போலவே மலையாள மொழி பேசும் மக்களுக்கும், கேரளாவினருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஓணம் பண்டிகை விளங்குகின்றது.

இந்த ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது மற்றும் எப்படி கொண்டாடப்படுகின்றது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

ஓணம் பண்டிகை

வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி மன்னனை அழித்ததும், அந்த மகாபலி மன்னன் வருடத்திற்கு ஒருநாளான ஆவணி திருவோண தினத்தில் தனது மக்களை பார்க்க வருவதுமே ஓணம் பண்டிகை ஆகும்.

இந்த பண்டிகையை கேரள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையை அறுவடை திருநாள் என்றும் அழைப்பர்.

மலையாளத்தில் சிம்ம மாதமான இந்த மாதத்தில் வரும் 20 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை என 10 நாட்கள் திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதில் மிகப்பெரிய திருவிழாவான திருவோண நட்சத்திரத்தில் வரும் திருவோண பண்டிகை வருகின்ற 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முக்கியமாக கொண்டாடப்படும் இந்த பத்து நாட்களுக்கு ஒவ்வொரு பெயர் வைத்து இருகின்றார்கள். அது பற்றி சற்று பார்க்கலாம். 

  • முதல் நாள் – அத்தம்
  • 2வது நாள் – சித்திரா
  • 3வது நாள் – சுவாதி
  • 4வது நாள் – விசாகம்
  • 5வது நாள் – அனுஷம்
onam / ஓணம் பண்டிகை
  • 6வது நாள் – திருக்கேட்டை
  • 7வது நாள் – மூலம்
  • 8வது நாள் – பூராடம்
  • 9வது நாள் – உத்திராடம்
  • 10வது நாள் – திருவோணம்

இந்த பெயர்களானது ராசிகளில் உள்ள நட்சத்திரங்களின் பெயர்களை அத்தத்தில் இருந்து திருவோணம் வரை 10 நாட்களுக்கு வைத்துள்ளனர்.

ஓணம் பண்டிகை கொண்டாடும் ஒவ்வொரு நாளும் பூக்களால் வாசல்களில் அலங்கரித்து வைத்திருப்பார்கள். அதாவது கடைசி நாள் அன்று தும்பை, காசி, சங்குப்பூ என பல வகை பூக்களால் வீட்டு வாசல்களில் அலங்கரித்து இருப்பார்கள்.

உணவு

கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன்,காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கரி ஆகியவற்றை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும். 

பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம் வைத்து உண்ணுவார்கள்.

onam / ஓணம் பண்டிகை

சாம்பார் சேர்த்து உண்டபின் பிரதமன் எனப்படும் பாயாசத்தை சாப்பிட்டு, இறுதியாக மோர் கூட்டான் சாப்பிடுவார்கள்.

அது போலவே எப்படி ஒரு சுவையான பிரதமன் செய்யலாம் என தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படிக்கவும். 

அடை பிரதமன்

தேவையான பொருட்கள்

  • அரிசி – 50 கிராம்
  • வெல்லம் – 100 கிராம்
  • தேங்காய் பால் – 200 கிராம்
  • தேங்காய் துண்டுகள் – தேவையான அளவு
  • முந்திரி – தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் – தேவையான அளவு
  • நெய் – தேவையான அளவு 
onam / ஓணம் பண்டிகை

செய்முறை

  • அரிசியை சுத்தம் செய்து கழுவி நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
  •  ஊற வைத்த அரிசியை மென்மையாக தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியான பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
  •  வாழை இலையை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து அதில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
  •  அரைத்த மாவை நெய் தடவி வைத்துள்ள வாழை இலையில் மெலிதாக பரப்பி மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  •  பிறகு இலையில் இருந்து எடுத்து ஆறவிடவும்.
  • சூடு ஆறிய பின் மாவினை சிறு சிறு துண்துகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • பின்னர் வெல்லத்தைக் தண்ணீரில் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் சேர்த்து, நெய் சூடானதும் அதில் முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுக்கவும்.
  • அதே பாத்திரத்தில் மேலும் சிறிது நெய்யை சேர்த்து சூடாக்கி வேக வைத்து வைத்துள்ள அடையை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
  • கரைத்து வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை அடையில் சேர்த்து கிளறிவிடவும்.
  • மிதமான தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறி விடவும்.
  •  அடை வெல்லத்துடன் சேர்ந்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
  • கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அதில் தேங்காய் பாலை சேர்த்து கிளறவும்.
  • பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடவும். 
  •  சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் ரெடி.