வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்றைய தினம் (30.03.2023) இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடையவுள்ளது.
ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று (30) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின் ஆரம்பமாகிய பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமய பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்புக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்தவாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.