கனடாவில் பிறந்த மூன்று பிள்ளைகள்… பெற்றோருக்கு குடியுரிமை மறுப்பு

0
560

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நீடித்துவரும் நிலையில், ஏற்கனவே குடியுரிமை நிராகரிக்கப்பட்ட உக்ரைன் குடும்பம் ஒன்று, கனடா நிர்வாகத்தின் முடிவுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐந்து பேர் கொண்ட இந்த உக்ரேனிய குடும்பம், போர் சூழல் காரணமாக கனடாவுக்கும் திரும்ப முடியாமல், போலந்து எல்லை கடந்து ஜேர்மனிக்கு சென்று, தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ளனர்.

மகர் மற்றும் அவரது மனைவி ஸ்விட்லானா ஆகிய இருவரும் கடந்த 2016ல் முதன்முறையாக கனடா வந்துள்ளனர். இவர்களது மூன்று பிள்ளைகளும் கனடாவில் பிறந்துள்ளதால், கனேடிய குடிமக்களாக கருதப்படுகின்றனர்.

ஆனால் மகர் மற்றும் அவரது மனைவி ஸ்விட்லானா ஆகிய இருவரின் குடியுரிமை கோரிக்கை கடந்த ஜனவரியில் மறுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் உக்ரேனுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா பெடையெடுப்பை முன்னெடுத்தது.

பிள்ளைகள் மூவரும் கனடா குடிமக்கள் என்றபோதும், தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இக்கட்டான சூழலிலும் கனடா திரும்ப முடியாததால், நண்பர் ஒருவரின் ஆதரவில் சுவிட்சர்லாந்துக்கு தப்பியுள்ளனர்.

கனேடிய சட்டத்திட்டங்களை மதித்து, வரியும் செலுத்தி வந்துள்ளமையால், இந்தமுறை கட்டாயம் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்றே அவர்கள் தரப்பு சட்டத்தரணி கூறுகிறார்.

மட்டுமின்றி, குற்றவியல் சிக்கல் ஏதும் இல்லை என்பதுடன், நன்கு ஆங்கில மொழியில் திறமையும் இருப்பதால் அவர்களுக்கு வேலை வாய்ப்பும் காத்திருக்கிறது என சட்டத்தரணி பார்பரா ஜோ கருசோ தெரிவித்துள்ளார்.

ஆனால், இவர்கள் போன்று சட்ட சிக்கலில் 100,000 வழக்குகள் நிலுவையில் உள்ளது, அதனால் கால தாமதமாகவும் வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மகரும் அவரது குடும்பத்தினரும் சுவிட்சர்லாந்தில் தங்கள் புதிய வாழ்க்கையை தொடரவே முயற்சித்து வருகின்றனர், மட்டுமின்றி ஜேர்மன் மற்றும் பிரஞ்சு மொழியைக் கற்கவும் முயன்று வருவதாக தெரிவித்துள்ளனர்.