மக்களுக்கான முக்கிய வாக்குறுதிகளை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்

0
317

வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிக தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா காலத்திலும் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற பெயரில் மக்கள் கேட்கும் உதவிகளை, அவர்களது பகுதிகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை அவர் செயல்படுத்தினார். இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினர்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ஒரு பிரசார திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், திருச்சி சிவா உள்பட 20 தலைவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படியே அந்த பிரசாரம் நடந்தது.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி ‘மக்கள் கிராம சபை கூட்டம்’ என்ற திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கேற்ப டிசம்பர் 23ஆம் தேதி முதல் கடந்த 21ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் 22 ஆயிரம் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி உள்ளனர். கடைசி கூட்டத்தை நேற்று முன்தினம் மதுரவாயலிலும் மு.க.ஸ்டாலின் நடத்தினார்.

திமுக மக்களுக்கு கொடுக்கப்போகும் முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? என்பதை இன்று காலை 11 மணிக்கு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் கருணாநிதியின் இல்லத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் அறிவிக்க உள்ளார்.