டெல்லியில் குவியும் விவசாயிகள் – பலத்த போலீஸ் பாதுகாப்பு

0
369

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசும், விவசாய அமைப்புகளும் 11 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சரியான முடிவுகள் எட்டப்படவில்லை. போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான நாளை தலைநகர் டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் அணிவகுப்பு நடத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிப்பது அரசு மற்றும் போலீசாரை சார்ந்தது எனக்கூறி விட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகளுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். பேரணி நடத்துவதில் உறுதியாக இருந்த விவசாயிகள், டெல்லியில் அரசின் குடியரசு தினவிழா கொண்டாட்டம் மற்றும் ராணுவ அணிவகுப்பு அனைத்தும் முடிந்த பின்னர்தான் இந்த பேரணியை நடத்துவோம் எனக்கூறினர்.

இதைத்தொடர்ந்து பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்து விட்டனர். மேலும் விவசாயிகள் பேரணி நடத்துவதற்கு வசதியாக, சிங்கு மற்றும் திக்ரி எல்லைப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகள் அகற்றப்படும் என்றும் அவர்கள் உறுதி கூறியுள்ளனர்.

அணிவகுப்பில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் டிராக்டர்-டிராலிகள் இடம்பெறும். பேரணியை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக ஒவ்வொரு போராட்டக்களத்திலும் சிறப்பு அறை ஒன்று உருவாக்கப்படும். இதில் டாக்டர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், சமூக வலைத்தள மேலாளர்கள் என 40 பேர் இருப்பார்கள். பேரணியில் பங்கேற்பவர்களுக்கு ஏதாவது மருத்துவ உதவி தேவைப்பட்டால், அதை நிறைவேற்றுவதற்காக 40 ஆம்புலன்சுகள், பேரணியில் ஈடுபடுத்தப்படும்.

பேரணியில் பங்கேற்க ஏராளமான விவசாயிகள் டெல்லியில் அணி, அணியாக குவிந்து வருகிறார்கள். இதனால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.