நல்லவர்களை, திறனுடையவர்களை யாழில் விட்டுவைக்க மாட்டார்கள் : விக்னேஸ்வரன்

0
651

இருதய அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்கான விசேடப் படுக்கை வசதிகள் இரண்டை மட்டுமே கொண்டுள்ள போதும் எமது வைத்திய நிபுணர் மிகச் சிறப்பாக இக் குறுகிய வளங்களுடன் சேவையாற்றுவது பாராட்டப்படவேண்டியது. ஆனால் அப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணரை இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நான் அறிகின்றேன். நல்லவர்களை திறனுடையவர்களை இங்கு விட்டுவைக்க மாட்டார்கள் போல்த் தெரிகிறது என வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(cv vigneswaran jaffna,Global Tamil News, Hot News, Srilanka news, )

யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளையினை இன்று(16) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவருடை உரையின் முழு வடிவம் இதோ,

இன்றைய நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற யாழ் போதனா மருத்துவமனையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களே, இந் நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கின்ற மத்திய அரசின் கௌரவ சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களே, கௌரவ பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, மாகாணசபை உறுப்பினர்களே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர். அனில் ஜாசிங்க அவர்களே மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற கௌரவ அதிதிகளே, சிறப்பு அதிதிகளே, வைத்திய அதிகாரிகளே, மருத்துவ உத்தியோகத்தர்களே, சகோதர சகோதரிகளே!

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரச மருந்தகம் மேலும் குவைத் செம்பிறைச் சங்கத்தின் நன்கொடையின் கீழ் புதிதாக அமைக்கப்படவிருக்கும் மீள்வாழ்வு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த நிகழ்வின் இறுதி நிகழ்வாக நடைபெறுகின்ற தாதியர் விடுதி கட்டடத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலை கட்டடத்தில் இடம்பெறுகின்ற இவ் வைபவத்தில் கௌரவ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின மற்றும் கௌரவ பிரதி அமைச்சர் பைசல் காசிம், மற்றும் சுகாதார சேவைகள் அத்தியட்சகர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க ஆகியோர்களின் முன்னிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் இன்றைய தரம் பற்றியும் இங்கு கடமையாற்றுகின்ற வைத்திய நிபுணர்களின் அப்பழுக்கற்ற சேவைகளைப் பற்றியும் உரையாற்றுவதில் பெரும் மகிழ்வடைகின்றேன்.

யாழ் போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்ற போதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அளவில் மக்களுக்குக் கிடைப்பதையிட்டு நாம் யாவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். இருதய அறுவை சிகிச்சைகள் இடம்பெறுகின்ற நாடளாவிய அரச மருத்துவமனைகள் நான்கில் ஒரு இடத்தை யாழ் போதனா வைத்தியசாலையும் பெற்றிருக்கின்றது என்பது எமது இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் பிரதி உபகாரம் கருதாத சேவை மனப்பாங்கைப் படம் போட்டுக் காட்டுவதாக அமைகின்றது. இருக்கும் வசதிகளை வைத்து அவர்கள் செவ்வனே பலர் போற்றும் வண்ணம் தமது சிகிச்சைகளை அளித்து வருகின்றார்கள்.

இருதய அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்கான விசேடப் படுக்கை வசதிகள் இரண்டை மட்டுமே கொண்டுள்ள போதும் எமது வைத்திய நிபுணர் மிகச் சிறப்பாக இக் குறுகிய வளங்களுடன் சேவையாற்றுவது பாராட்டப்படவேண்டியது. ஆனால் அப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணரை இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நான் அறிகின்றேன். நல்லவர்களை திறனுடையவர்களை இங்கு விட்டுவைக்க மாட்டார்கள் போல்த் தெரிகிறது. கௌரவ பள்ளிகக்கார என்ற ஒரு சிறந்த ஆளுநர் இங்கு இருந்தார். அவரை இங்கிருந்து ஒரு வருடத்தில் மாற்றி ஒரு அரசியல்வாதியைக் கொண்டுவந்தார்கள். அவரின் நடவடிக்கைகள் எங்களைக் கோட்டு வரை கொண்டு சென்றுள்ளது. முதலமைச்சரால் அவருக்கு சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 20ந் திகதி அனுப்பப்பட்ட அமைச்சர் ஒருவர் பற்றிய தீர்மானம் இதுவரையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.

கௌரவ அமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்வது நற்சேவை செய்து வருபவர்களை தயவு செய்து தொடர்ந்து இங்கு சேவை செய்ய விடுங்கள். தற்போதைய இங்கிருக்கும் அறுவைச்சிகிச்சை நிபுணர் நான் பதவிக்கு வந்த பின்னரே இங்கு வந்தார். அவரை மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. இரண்டு வருடங்களின் பின்னர் வடக்கு, கிழக்கு வைத்தியர்களை மாற்றம் செய்யும் பழக்கம் இங்கு போர்க்காலத்தில் அமுலில் இருந்தது. தற்போது அவ்வாறான முறை இருக்கத்தேவையில்லை. தயவு செய்து இது பற்றி கௌரவ அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகின்றேன்.

அது போன்றே ஏனைய துறைசார் வைத்திய நிபுணர்களும் இங்கு தமது சேவைகளைத் திறம்பட முன்னெடுத்துவருகின்றனர். தமது வளங்கள் குறைந்திருப்பினும் எமது வைத்திய நிபுணர்களின் திறன் நிறைந்திருப்பது எமது பாக்கியமே. இங்கு கடமையாற்றும் எமது வைத்திய நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கோடி கோடியாகப் பணம் ஈட்டக்கூடியவர்கள். அவர்கள் தமது தாயகத்தின்பாலும் அதில் வசிக்கும் மக்கள்பாலும் கொண்டுள்ள அன்பின் நிமித்தமே இங்கு கடமையாற்றுகின்றார்கள். இதை எம் மக்கள் உணர வேண்டும்.

இந் நிலையில் வட பகுதி முழுவதற்கும் ஒரே ஒரு போதனா வைத்தியசாலையாக விளங்கும் இவ் வைத்தியசாலையின் தேவைகளைக் கௌரவ அமைச்சர் அவர்களும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களும் உன்னிப்பாக கவனித்து அவ்வவ்போது வேண்டிய உதவிகளையும் கட்டட தளபாட உதவிகளையும் வழங்கி வருவதையிட்டு வடபகுதி மக்கள் சார்பில் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் கௌரவ அமைச்சர் அவர்களுக்கும் கௌரவ பிரதி அமைச்சர் அவர்களுக்கும் அத்தியட்சகர் நாயகம் அவர்களுக்கும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.
வைத்திய துறை என்பது உயிர் காக்கும் ஒரு சேவை. அந்தச் சேவையில் எந்த அவசர கடமையும் நாளைக்கென்று பிற்போட முடியாது. அதனாற்றான் வைத்திய நிபுணர்களைக் கடவுளுக்கு ஒப்பானவர்களாக மக்கள் இனம் காண்கின்றார்கள். கௌரவ அமைச்சர் அவர்களும் ஒரு வைத்தியராக விளங்குவதால் அவர் இத் துறையில் இருக்கும் நேர் எதிர் விளைவுகளை மிகத் துல்லியமாக விளங்கிக் கொள்ளக் கூடியவர். அந்த வகையில் வட பகுதி மருத்துவர்கள் தமது கடமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவர்களுக்கு இருக்கும் குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் அறிந்து, தெரிந்து வைத்து அவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் உறுதுணையாக இருப்பார் என்று எண்ணுகின்றேன்.

அரச வைத்தியசாலைகளின் நெருக்கடிகளைக் குறைக்கும் விதமாக பல தனியார் மருத்துவமனைகள் ஆங்காங்கே தோன்றி சிறப்பாகச் செயற்படுகின்றன. அரச மருத்துவமனைகளில் உடனடியாக மேற்கொள்ளப்பட முடியாத பல அறுவைச் சிகிச்சைகளும் மற்றும் இன்னோரன்ன சிகிச்சைகளும் உடனடியாகவோ அல்லது மறு தினமோ தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் அரச மருத்துவ மனைகளில் இது முடிவதில்லை. இதற்கான காரணம் போதிய மருத்துவ நிபுணர்கள் இன்மை, அறுவைச் சிகிச்சைக்கான சத்திர கூட நிலைய வசதிகளின் குறைபாடுகள், நோயாளிகளுக்கான இடப்பற்றாக்குறை மற்றும் வளப் பற்றாக்குறைகள் என்பன. இவற்றின் காரணமாக அரச மருத்துவமனைகளில் இந்த அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாதிருப்பது வேதனைக்குரியது. வாரங்கள், மாதங்கள் என்று நோயாளிகள் காத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.

பிரத்தியேக மருத்துவமனைகளில் பணம் படைத்தவர்களும், வசதி படைத்தவர்களும் தமது சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கின்றது. ஆனால் நிதி நிலைமைகளில் நலிந்தவர்கள் தமது மருத்துவ சேவைகளை அரச மருத்துவமனைகளிலேயே பெற்றுக் கொள்ள முடியும். நலிந்த மக்களுக்கும் எமது சேவைகள் கிடைக்கப் பெற வேண்டும். அதற்கான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும்.

அதே போன்று பிரத்தியேக மருத்துவமனைகளும் பொருளீட்டத்தை மட்டும் முதன்மைக் காரணியாகக் கொள்ளாது சேவை அடிப்படையில் நலிவுற்ற மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மருத்துவ சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்ற வழி முறைகளை உருவாக்கித் தர வேண்டும்.

பிரத்தியேக மருத்துவமனைகளில் பணத்தைக் கறந்து எடுப்பதற்கென்றே சில உத்தியோகத்தர்களை விசேடமாகச் சேவைக்கு அமர்த்தியிருப்பதாகப் பலரும் கூறக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அவர்களின் பெயர் விபரங்களைக் கூட பொது மக்கள் வெளியிடுகின்றார்கள். இவர்களின் செயற்பாடு பிரத்தியேக மருத்துவமனைகளின் நிர்வாகக் கட்டமைப்புக்கும் வருமானத்திற்குமாக சில வேளைகளில் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அங்கு மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் தமது தூக்கம், குடும்ப சூழல் எல்லாவற்றையும் மறந்து சேவையாற்றச் செல்லுகின்ற வைத்திய நிபுணர்களின் பெயர்களுக்குக் களங்கம் கற்பிக்கக் கூடிய வகையில் அவை இடம் பெறக் கூடாது. சுண்டங்காய் காற்பணம் சுமை கூலி முக்கால்ப் பணம் என்பது போன்று வைத்திய நிபுணர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் மக்களிடம் அறவிடப்படும் பணத்தில் எட்டில் ஒரு பங்கு கூட இருக்குமோ தெரியாது. கால்வாசி கூட இல்லை என்பது நிச்சயம். இந்த அட்டூழியங்கள் குறித்து வைத்திய நிபுணர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் இவ்வாறான மருத்துவமனைகளுக்குச் சில அறிவுறுத்தல்களை வழங்க முடியும். இவ்வாறான மருத்துவமனைகளின் சேவைகள் பொதுவானதாகவும் எல்லா மக்களுக்கும் ஓரளவுக்கேனும் ஏற்புடையதாகவும் அமையாதவிடத்து அம் மருத்துவமனைகளில் நீங்கள் வழங்குகின்ற சேவைகளை விலத்திக் கொள்ளப் போகின்றீர்கள் எனத் தெரிவியுங்கள். உடனே அவர்கள் வழிக்கு வருவார்கள்.

இதன் மாற்றொழுங்காக அரச மருத்துவமனைகளில் கூடுதல் கவனம் எடுத்து தற்போது நீங்கள் வழங்குகின்ற அர்ப்பணிப்புடனான சேவையை விட ஒரு படி மேலாகச் சென்று முடிந்தளவு பொருளாதார வசதியில் நலிந்தவர்களை அவர்களது நோய்களின் தன்மைகளிற்கேற்ப அவர்களுக்கான மருத்துவச் சேவைகளை வழங்குகின்ற போது உங்களைக் கடவுளுக்கு ஒப்பானவர்களாக இந்தச் சமூகம் நோக்கும். உங்கள்; வளமான வாழ்விற்காகத் தினமும் பிரார்த்தனை பண்ணுவார்கள். உத்தம தொழில்களில் ஆசிரியத்தொழிலுக்கு அடுத்து மருத்துவ தொழில் இடம்பெறுகின்றது. அது மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். பணம் சார்ந்ததாக இருக்கப்படாது. மூன்றாவது உத்தம தொழில் சட்டத்தரணித் தொழில். றோமர்கள் காலத்தில் சட்டத்தரணிகளின் கறுத்த அங்கிகளின் பின் புறத்தில் ஒரு சட்டைப் பை இருந்தது. கட்சிக்காரர்கள் வேண்டிய தொகையை அதில் போட்டுச் செல்வார்கள். பணம் கிடைத்தாலோ கிடைக்காவிட்டாலோ சட்டத்தரணியின் திறமை மக்கள் சார்பாக மன்றில் காட்டப்பட வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் பணம் சார்ந்ததாக சட்டத்தரணித் தொழில் இருக்கவில்லை மருத்துவத் தொழிலும் மக்கள் சார்ந்ததாக மாற வேண்டும். என்று கூறி இன்றைய நிகழ்வுகளுக்கு உறுதுணையாக நின்ற அமைச்சர் அவர்களுக்கும் எமது அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களுக்கும் மற்றைய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து உங்கள் அனைவரையும் வாழ்த்தி என்னுரையை நிறைவு செய்கின்றேன்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:cv vigneswaran jaffna,Global Tamil News, Hot News, Srilanka news,