ஊழலுக்கு எதிரான ஜனநாயகத்தை மதிக்கும் அரசியல் ஆளுமையே இலங்கையின் அபிலாஷை – மைத்திரி

0
377
Maithripala Sirisena said Sri Lankan people hopte best political personality

(Maithripala Sirisena said Sri Lankan people hopte best political personality)

ஊழலுக்கு எதிரானதும் ஜனநாயகத்தை மதிக்கும் சிறந்த அரசியல் ஆளுமையே இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரான காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உருவச் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.

பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் சிறந்த பணிகளை மேற்கொண்டு, திருகோணமலை மாவட்ட மக்களுக்காக விரிவான சமூகப் பணிகளைச் செய்த மக்கள் தலைவரான எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தனவின் ஞாபகார்த்தமாக கந்தளாய் நகர மண்டப வளாகத்தில் இந்த உருவச் சிலை தாபிக்கப்பட்டுள்ளது.

எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன ஒரு சிறந்த, நேர்மையான அரசியல் ஆளுமையாளராவார் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழலுக்கு எதிராக போராடிய அவர் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவராவார் என்று குறிப்பிட்டார்.

இது போன்ற நேர்மையான அரசியல் ஆளுமைகள் நாட்டுக்கு மிகவும் தேவையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2015 ஜனவரி 08 ஆம் திகதி இடம்பெற்ற யுக புரட்சிக்காக பொது அபேட்சகராக முன் வந்த தனக்கு பின்னால் ஒரு நிழலாக இருந்து அவர் வழங்கிய பலத்தையும் மிக நெருங்கிய அரசியல் நண்பராகவிருந்து நிறைவேற்றிய வகிபாகத்தையும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.

திருகோணமலை அபிவிருத்தி பற்றி கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் இதற்காக விரிவான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள குளங்களை புனரமைப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக விசேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதனூடாக அதிகளவு குளங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எஞ்சியுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தி திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்களுக்கு அபிவிருத்தியின் பெறுபேறுகளை கிடைக்கச் செய்வதாக குறிப்பிட்டார்.

வடமேல் பாரிய வாய்க்கால் நிர்மாணப் பணிகள் இம்மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் ஊடாகவும் திருகோணமலை நகர மக்களின் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவசாயத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உருவச் சிலையை திறந்து வைத்த ஜனாதிபதி, அதற்கு மலர் வளையம் ஒன்றையும் வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள கந்தளாய் நகரில் பெரும் குறைபாடாக இருந்து வந்த நகர மண்டபத்தை ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார்.

இதற்காக 83 மில்லியன் ரூபா செலவி்டப்பட்டுள்ளதுடன், இரண்டு மாடிகளை கொண்ட நகர மண்டபத்தில் மேல்மாடியில் 1000 இருக்கைகளைக் கொண்ட கேட்போர் கூடமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள 09 நீர் சுத்திகரிப்பு முறைமைகளையும் தொலையியக்கி தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியுடன் மக்களிடம் கையளித்தார்.

மாவட்டத்திலுள்ள 160 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 05 பேர்களுக்கான நியமனங்களை வழங்கி ஜனாதிபதி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாய சமூகத்திற்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சேருவில தொகுதி அமைப்பாளர் நளின் குணவர்தன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை தொகுதி அமைப்பாளர் ஆரியவதி கலபதி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

(Maithripala Sirisena said Sri Lankan people hopte best political personality)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites