ஸ்காபுரோ ரூட்ஜ் பார்க் தொகுதியின் புரொகிரசிவ் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளர் விஜய் தணிகாசலம் தொடர்பில் சர்ச்சையொன்று கிளம்பியுள்ளது. Vijay Thanigasalam Tiger Remarks Twitter
அவர் இட்ட டுவிட்டர் பதிவொன்று தொடர்பிலேயே இச்சர்ச்சை கிளம்பியுள்ளது.
விஜய் தணிகாசலம் இந்த தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புக்களை அதிகம் கொண்ட தமிழர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இத்தகையதொரு நிலையில் அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“கடந்த காலங்களில் தமிழ் புலிகள் தொடர்பில் தான் சில விடயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் அதற்காக மனம் வருந்துவதாகவும் தற்போது தான் அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லை” என்றும் விஜய் தணிகாசலம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்வினை வெளியிட்டிருந்தார்.
இது தமிழரிடையே பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. விஜய் தணிகாசலத்தின் உண்மையான கொள்கை எது என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களின் ஊடாகவும் பலர் விஜய் தணிகாசலத்திடம் அவரது உண்மையான கொள்கை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதுடன் , பலர் விசனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
நிலமை இவ்வாறு இருக்க விஜய் தணிகாசலம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இலக்குவைக்கப்பட்டுள்ளாரா எனவும் கேளவி எழுகின்றது.
இது தொடர்பில் சக தமிழ் ஊடகமொன்று சில விபரங்களை வெளியிட்டுள்ளது, அதன்படி;
கனடாவின் பிரதான ஊடகம் ஒன்றிற்கு தமிழ் சமூகத்தின் சில பிரதிநிதிகளால் விஜய் தணிகாசலம் அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்த சில ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த ஆதாரங்களில் ஒன்றில் விஜய் தணிகாசலம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகவும் மற்றைய பதிவு கரும்புலிகளின் தியாகம் குறித்து அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளதாக குறித்த ஊடக நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை வெளியிடப்படப் போவதாகவும் இது குறித்து கட்சியின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் புரோகிரசிவ் கொன்சவேற்றிவ் கட்சியை தொடர்பு கொண்ட அந்த ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பு ஒன்றின் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஒருவர் அந்த அமைப்பின் தற்கொலைப் போராளிகளை உயர்வாக கருதும் ஒருவருக்கு எவ்வாறு நீங்கள் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினீர்கள் என்பது அந்த ஊடகவியலாளரின் கேள்வியாக அமைந்திருந்தது.
இந்த கேள்விக்கான பதிலும் இதன் தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ள கட்டுரையும் தமது கட்சிக்கும் அதன் வெற்றிக்கும் பாதிப்பாக அமையும் என்று கருதிய கட்சி மேலிடம் விஜய் தணிகாசலம் என்ற “தனது கட்சியின் வேட்பாளரை” இதற்கான பதில் நடவடிக்கையில் ஈடுபடுமாறு பணித்துள்ளது.
அதன் அடிப்படையில் அவர் அவ்வாறானதொரு தகவலை வெளியிட்டிருக்கமுடியுமென சுட்டிக்காட்டப்படுகின்றது.