மே.தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இன்று!!!

0
501
West Indies vs Sri Lanka 1st Test 2018

இலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயினில் ஆரம்கமாகவுள்ளது.

கரீபியன் நாடுகளில் இதுவரையி்ல் டெஸ்ட் தொடரில் வெற்றிபெறாத இலங்கை அணி, சந்திமால் தலைமையில் முதன்முறையாக தொடரை வெல்லும் முனைப்புடன் தொடரை எதிர்கொண்டுள்ளது.

பலமான அணியாக வலம் வந்த இலங்கை அணி கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச அளவில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

எனினும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை அணி, டெஸ்ட் தொடர்களில் ஓரளவு மாற்றத்துடன் விளையாடி வருகின்றது.

இறுதியாக வெளிநாட்டில் நடைபெற்ற தொடர்களில் இலங்கை அணி வெற்றிகளை தங்கள் பக்கம் திருப்பியிருந்தது.

முதலாவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை அணி, தொடர்ந்து இந்திய அணிக்கெதிரான தொடரை சமப்படுத்தியதுடன், பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரை வெற்றிக்கொண்டது.

மே.தீவுகள் அணியின் டெஸ்ட் பிரகாசிப்பு மிகப்பெரிய அளவில் இல்லை என்றுதான் கூறவேண்டும். இறுதியாக போட்டியிட்ட 11 டெஸ்ட் போட்டிகளில், சிம்பாப்வே அணிக்கெதிரான ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.

எவ்வாறயினும் கடந்த ஆண்டு ஹெடிங்லேவில் வைத்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இதே மே.தீவுகள் அணி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தது. இதனால் மே.தீவுகள் அணி எந்த நேரத்திலும் தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வளர்த்து வைத்துள்ளது.

அத்துடன் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கான அணிக்குழாத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என பார்த்தால், இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தந்தையை இழந்த தனஞ்சய டி சில்வா மே.தீவுகளுக்கு அணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே பயணமாகியிருந்தார். இதனால் இவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை உபாதைக்குள்ளாகியுள்ள திமுத் கருணாரத்னவுக்கு பதிலாக மஹேல உடவத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.

இலங்கை அணிக்கு பந்து வீச்சில் ஏற்பட்டுள்ள சிக்கல், டில்ருவான் பெரேராவை களமிறக்குவதா? அல்லது தனஞ்சய டி சில்வாவை களமிறக்குவதா? என்பதுதான். அண்மைக்காலமாக சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் தனஞ்சயவை அணியில் இணைத்தாலும், டில்ருவானின் துடுப்பாட்டம் அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. இதனால் இவர்கள் இருவரில் யார் தெரிவுசெய்யப்படுவர் என்பது கேள்விக்குறி.

மே.தீவுகளை பொருத்தவரையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் அணியில் இணைக்கப்பட்டுள்ள டெவோன் ஸ்மித் மற்றும் ஜெஹ்மர் ஹெமில்டன் ஆகியோர் இறுதி பதினொருவரில் இணைக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷு இன்றைய போட்டியில் விளையாடுவார் எனவும் மே.தீவுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திமால் தலைமையிலான இலங்கை அணி, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை அவர்களது சொந்த மைதானங்களில் வீழ்த்தியுள்ளது. இதனால் இன்றைய ஆரம்பமாகும் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

<<Tamil News Group websites>>

West Indies vs Sri Lanka 1st Test 2018, West Indies vs Sri Lanka 1st Test 2018