Fertilizer 4 zones trash including milk
நெல்லை மாவட்டம் – பாளை, மேலப்பாளையம் உள்ளிட்ட 4 மண்டலங்களிலும் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக பாளையில் ரூ.20 லட்சம் செலவில் உரம் தயாரிக்கும் யூனிட் அமைக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியைப் பொருத்தவரை திடக்கழிவு மேலாண்மை திட்டம் சில ஆண்டுகளாகவே தீராத தலைவலியாக இருந்து வந்தது. மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என குப்பைகளை பிரித்து அவற்றை அழிப்பதில் பல்வேறு சவால்களை மாநகராட்சி எதிர்கொண்டது. மக்கும் குப்பைகள் ராமையன்பட்டி அருகே குப்பை கிடங்கில் மலைபோல் குவிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மக்காத குப்பைகளை அழிக்க மாநகராட்சி போட்ட திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாகவே இருந்தன.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் குப்பைகளை பெறுவதில் தமிழகத்தில் மற்ற மாநகராட்சிகளில் இல்லாத புதிய நடைமுறையை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரணியன் நடைமுறைப்படுத்தினார். அதன்படி புதன்கிழமைகளில் பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகள் மட்டுமே பெறப்பட்டன. பிற தினங்களில் வழக்கம்போல் மக்கும் குப்பைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டங்கள் நெல்லை மாநகராட்சியில் தற்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. மக்கும் குப்பைகளை உரமாக்க 4 மண்டலங் களிலும் தனித்தனியே உரம் தயாரிக்கும் யூனிட் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் பாளை மண்டலத்தில் மனக்காவலம் பிள்ளை பூங்கா பின்பகுதியிலும், மேலப்பாளையம் சந்தை அருகேயும் அமைக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை, தச்சை மண்டலங்களிலும் இதற்கான தனி யூனிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாளை மனக்காவலம்பிள்ளை பூங்காவில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மக்கும் குப்பையில் உரம் தயாரிப்பு யூனிட்டில் 8 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வார்டுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் தொட்டிகளில் போடப்பட்டு, இலை தழைகள் கொண்டு மூடப்படுகின்றன. அவற்றின் மேல் சாணம், மண்டவெல்ல சாறு, நுண்ணுயிர் திரவம் ஆகியன ஊற்றப்பட்டு இறுக வைக்கப்படுகிறது. 54 தினங்களுக்கு பின்னர் இறுகும் குப்பைகள் உரமாக மாறுகின்றன. இத்தைகய இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த யூனிட் மூலம் மாதந்தோறும் ஒரு டன் இயற்கை உரம் கிடைக்கப்பெறும் என மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
More Tamil News
- பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்!
- குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு – சாகுபடி பணி தீவிரம்!
- திட்டக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் மணல் கடத்தல்!
- பத்துலட்சம் பரிசு தரும் புகைப்பட போட்டி அழைக்கிறது – கோவை லட்சுமி மெஷின் டூல்ஸ்!
- நாராயணசாமிக்கு ஆச்சரியம் கொடுத்த ஆளுநர் – கிரண் பேடி!