இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலைவாரியது : ரிஷாட்

0
4723
rishard badurdeen TNA

வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 14 சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் இணைந்து ஆட்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், சுமந்திரன் எம்.பிக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலைவாரியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் விழா, இன்று காலை (03) பேசாலையில் அமைந்துள்ள பிரதேச சபையின் மண்டபத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில், அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை கட்டியெழுப்பும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கும், அதன்மூலம் மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் எண்ணினோம்.

அந்தவகையில், மக்கள் காங்கிரஸின் தலைவரான நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் எம்.பியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் வெற்றிபெற்ற சபைகளில் எமது கட்சி இரண்டாம் நிலையாகவும், நாங்கள் வெற்றிபெற்ற சபைகளில் அவர்களது கட்சி இரண்டாம் நிலையாகவும் இருந்து, தமிழ் – முஸ்லிம் நல்லுறவுக்கான பாலமாக புதிய ஆட்சியை மலரச் செய்வோம் என்று பேசினோம்.

எமது யோசனைக்குச் செவிசாய்த்து ஆரம்பத்தில் இதற்குச் சம்மதித்தவர்கள், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான காலம் நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நாங்கள் வெற்றிபெற்ற சபைகளில் எங்களை வீழ்த்த வேண்டுமென்று செயலாற்றினார்கள்.

எம்மைத் தவிர்த்து எல்லாக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு, எமக்குக் கிடைத்த மக்கள் ஆணையை சிதறடிப்பதற்கு அவர்கள் முயற்சிகளில் வலுவாக ஈடுபட்டார்கள். இந்த நடவடிக்கைகள்தான் வன்னி மாவட்ட உள்ளூராட்சி சபைகளில், சபைகளை அமைப்பதில் முரண்பாடுகளும், சமநிலையற்ற தன்மையும் ஏற்படக் காரணமாயிற்று.

மன்னார் பிரதேச சபையை பொறுத்தவரையில், இது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இலகுவாகச் செல்வதற்கு, கப்பல் வழியான துறைமுகமாக தலைமன்னார் துறை விளங்குகின்றது.

யுத்த நெருக்கடிகளால் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இந்தியாவுக்கும் சென்றிருக்கின்றார்கள். தென்னிலங்கைக்கும் சென்றிருக்கின்றார்கள். இப்போதும் அவர்கள் அகதிகளாகவே வாழ்கின்றனர். எனவே, வாழ்க்கையிலே பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருந்த மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இந்தப் பிரதேச சபைக்கு இருக்கின்றது.

அதுமட்டுமின்றி இந்தப் பிரதேசத்தில் துறைகளை வளப்படுத்துவதன் மூலம், சுற்றுலாத் துறைக்கான வாய்ப்பினை அதிகரிக்க முடியும். இன, மத, பேதங்களுக்கு அப்பால் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றனர்.

தவிசாளரைப் பொறுத்தவரையில் எமது அரசியல் பணியுடன் நீண்டகாலம் பயணித்து வருபவர். இந்தப் பிரதேசம் மாத்திரமின்றி மன்னார் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் அவரது சேவை வியாபித்திருப்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அவர் செய்த தியாகங்களுக்குக் கிடைத்த பிரதிபலனாகவே இதனை நான் கருதுகின்றேன். அவரும், அவருடன் இணைந்தவர்களும் தமது பொறுப்பைச் சரியாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எதிர்க்கட்சியினர் உட்பட எல்லோரையும் இணைத்துக்கொண்டு பக்குவமாகப் பயணஞ்செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இந்த விழாவிலே ஒரு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பதே வருத்தம் அளிக்கின்றது. நானாட்டான் பிரதேச சபை அமர்விலே எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எந்தவிதமான பேதமைகளையும் பொருட்படுத்தாது, கண்ணியமாக கலந்துகொள்ள வேண்டுமென்று நான் வழங்கிய அறிவுரையை ஏற்று, அவர்கள் கூட்டங்களில் கலந்துகொண்ட போதும், மன்னார் பிரதேச சபையில் ஒரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமை ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் கருதுகின்றேன். எதிர்காலங்களில், இந்த சூழ்நிலை மாற்றமடைய வேண்டுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags:rishard badurdeen TNA, rishard badurdeen TNA