பாரிய சுமையில் இலங்கை : ரூபாவின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்..!

0
875
sri lanka central bank

(sri lanka central bank)
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடைய செய்ய யாராவது முயற்சித்தால் அதற்கு அதற்கு எதிராக மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

டொலர் விற்பனை விலையை தீர்மானிக்கும் விடயத்தில் தலையிடுவதில்லையென கடந்த வருடம் மார்ச் முதல் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. மிதக்கும் நாணயமாற்று வீதக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதற்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களே காரணமாகும் எனவும் அவர் கூறினார்.

2017ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. நிதி அமைச்சரிடம் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் மத்திய வங்கியில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் நாணயமாற்று இருப்பு 9.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. சந்தையிலிருந்து இந்த வருடம் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி கொண்டுவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான பின்னணியில் கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. இருந்தபோதும் செயற்கையான தோற்றப்பாட்டை ஏற்படுத்த நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய யாராவது முயற்சித்தால் அதனைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி தலையிடும் என்றார்.

அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட கடன் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதன் இரண்டாவது கொடுப்பனவு என்பவை கிடைக்கும்போது டொலரின் வருகை அதிகரித்து நாணயப் பெறுமதி உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் விளக்கமளித்த மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் விக்ரமசிங்க, சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாணயப் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுவது வழமையானது. புத்தாண்டுக்கு முன்னர் இறக்குமதிகளுக்காவும், ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும் பெருமளவு டொலர் செலவிடப்பட்டிருக்கும். புத்தாண்டின் பின்னர் டொலருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டமையால் மிதக்கும் நாணயமாற்று சந்தைக்கு அமைய நாணயப் பெறுமதி அதிகரித்துள்ளது. இதுவே இந்த நிலைமைக்குக் காரணமாகும். டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 1.6 வீதமே வீழ்ச்சியடைந்துள்ளது.

நாணயத்தின் பெறுமதி குறைந்திருப்பதால் மீளச்செலுத்தவேண்டிய வெ ளிநாட்டுக் கடன்தொகை அதிகரித்துவிடும் என முன்வைக்கப்படும் கருத்துக்கள் தவறானவை. கணக்கிடுதலில் காணப்படுத் தவறுகளின் அடிப்படையிலேயே இவ்வாறான கருத்துக்களை சிலர் முன்வைக்கின்றனர் என்றார்.

அதுமாத்திரமன்றி அண்மைய காலத்தில் டொலருக்கு எதிரான பிராந்திய நாடுகளின் நாணயப் பெறுமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். டொலருக்கு எதிராக இந்திய நாணயத்தின் பெறுமதி 4.8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாணயத்தின் பெறுமதி 4.4 வீதமாகவும், இந்தோனேசிய நாணயத்தின் பெறுமதி 4 வீதமாகவும், அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி 2.7 வீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் அவர் விளக்கமளித்தார்.

அதேவேளை, 2018ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார். கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட வரட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு அரிசி இறக்குமதி செய்யவேண்டி ஏற்பட்டமை மற்றும் அனல்மின்நிலையங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்தமையால் அதற்கான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டமை போன்றவற்றால் பண சமநிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2017ஆம் ஆண்டு இறுதியில் 8.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளன. நிதியியல் கணக்கிற்கான கணிசமான உட்பாய்ச்சல்களின் இன்னொரு விளைவாக இரண்டு ஆண்டுகளாக பாற்றாக்குறையிலிருந்து சென்மதி நிலையின் திரண்ட நிலுவை 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் மிகையொன்றினைப் பதிவுசெய்திருப்பதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:sri lanka central bank, sri lanka central bank