அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அடுத்த ஆண்டு முதல்

0
36

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 2025ஆம் ஆண்டு நிச்சயமாக சம்பள உயர்வு வழங்கப்படும். என்றாலும், எவ்வளவு ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்படும் என்பதை திறைசேரியில் உள்ள நிதியை மதிப்பாய்வு செய்த பின்னரே கூறமுடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜிய ஹேரத் தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியதுடன் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

”அரச ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு விருப்பம். ஆனால் திறைசேரியில் உள்ள நிதியின் பிரகாரம்தான் குறித்த தீர்மானம் எடுக்கப்படும்.

ஜனவரி மாதம் முதல் உதய ஆர்.செனவிரத்னவின் குழு அறிக்கையின்படி சம்பளத்தை அதிகரிப்பதற்கு கடந்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அமைச்சரவையில் முடிவெடுக்க முடியும் ஆனால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமே.

கடந்த ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தது. ஏப்ரல் மாதம் வரையான நிலுவை தொகையை ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறியது. ஏப்ரல் மாதம் முதல் 10ஆயிரம் ரூபா கிடைக்கப்பெற்றது. ஆனால் நிலுவை தொகையை வழங்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதற்கிடையில் 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, பொது சேவை வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் மற்றும் விதவை மற்றும் அனாதை ஓய்வூதிய பங்களிப்புகளை சேகரிப்பதில் திருத்தம் செய்து ஜனவரி 10, 2024 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான நிலுவை தொகையை 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மாதத்திற்கு 5000 ரூபா வீதம் நிலுவைத் தொகையை வழங்குவது என்ன என்பது சுற்றறிக்கையில் தெளிவாக உள்ளது.

அப்போது நாட்டுக்கு ஒரு அப்பட்டமான பொய்யை கூறியுள்ளனர். நாட்டுக்கு ஒக்டோபர் மாதம் இருந்து செலுத்த முடியும் என்றே கூறினர். இவைதான் பொய். முன்னாள் ஜனாதிபதி மக்களை ஏமாற்றியுள்ளமையே இந்த சுற்றறிக்கை தெளிவுப்படுத்துகிறது. அதனால் அரச ஊழியர்களுக்கு நாம் கூறுவதாவது ஒருநாளும் நாம் உங்களை ஏமாற்ற மாட்டோம்.

2025ஆம் ஆண்டு முதல் அரச சேவைக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். அதற்கான உத்தரவாதத்தை வழங்குவோம். ஆனால் அது எவ்வளவு ரூபாவாக இருக்கும் என்பதை தற்போது கூற முடியாது. நிதி தொடர்பிலான மதிப்பாய்வுகளின் பின்னர்தான் அதனை கூற முடியும். வரவு – செலவுத் திட்டத்தில் இதுகுறித்து அவதானம் செலுத்தப்படும்.” என்றார்.