யோசித்தவுக்கு ஏழு துப்பாக்கிகள் எவ்வாறு கிடைத்தன?: இன்று வெளிவருகிறது விசேட அறிக்கை

0
47

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித் ராஜபக்சவுக்கு 7 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் இன்று புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சின் இறுதி அறிக்கை கிடைக்கப் பெற்றதும் பகிரங்கப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் மற்றும் சில தரப்பினருக்கு பாதுகாப்பு அமைச்சால் வழங்கப்பட்டுள்ள துப்பாகிகளை இன்று 7ஆம் திகதிக்கு முன்னர் மீள கையளிக்க வேண்டும் என அரசாங்கம் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

அதன் பிரகாரம் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் விசேட நபர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 9 துப்பாக்கிகளையும் யோசித ராஜபக்ச 7 துப்பாக்கிகளையும் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் நேற்று புதன்கிழமை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான விஜித ஹேரத்திடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்,

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விசேட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை நாளை (இன்று) நவம்பரம் 7ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு கூறியுள்ளோம். அதன் பிரகாரம் அவை கையளிக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 9 துப்பாக்கிகளையும் யோசித ராஜபக்ச 7 துப்பாக்கிகளையும் கையளித்துள்ளதான தகவல்கள் தம்மிடம் இல்லை. நாளைய தினம் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பிலான அறிக்கையை கையளிக்கும். அதன் பின்னர் இதனை மக்களுக்கு பகிரங்கப்படுத்த முடியும். அதனை மறைப்பதற்கான எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை.” என்றார்.

யோசித்தவிடம் எவ்வாறு 7 துப்பாக்கிகள் உள்ளன. அமைச்சர் ஒருவரை போன்று அவருக்கு துப்பாக்கிகள் வழங்கப்படுவது நியாயமானதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இதன்போது பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ,

”சிவிலியர்களின் பாதுகாப்புக்கான துப்பாக்கிகள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகதான் வழங்கப்படுகின்றன. விண்ணப்பதாரரின் கோரிக்கைகள் மற்றும் அவர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகளின் பிரகாரம் குறித்த செயல்பாடு இடம்பெறும்.

யோசித்தவுக்கு எவ்வாறு துப்பாக்கிகள் கிடைத்தன. எந்த காரணியின் அடிப்படையில் அவருக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன என்பதை இத்தருணத்தில் கூற முடியாது. நாளைய தினம் அறிக்கை கிடைத்ததும் பாதுகாப்பு அமைச்சில் இதுதொடர்பிலான விளக்கங்களை கோர முடியும்.” என்றார்.