என்னை பலர் சவாலாக நினைக்கின்றனர்: ரஞ்சன் ராமநாயக்க

0
27

“அரசியலில் எனக்கு யாரும் சவால் கிடையாது, மாறாக பலர் என்னை சவாலாக நினைக்கின்றனர். இதன் காரணமாகவே எனது அரசியல் வருகைக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என இரண்டு கட்சிகளில் நான் உறுப்பினராக இருந்திருந்தேன். அந்த இரண்டு கட்சிகளிலும் ஏன் நான் வேட்பு மனுப் பெறவில்லை என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள்.

அந்த கட்சிகள் இரண்டிலும் உள்ள சலூன் கதவுகளில், எல்லோரும் நுழைந்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் நான் தனியாக அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன்.

நான் நேர்மையாக கசப்பான உண்மைகளை கதைத்தமையால், சிறைச்சாலைக்கும் செல்ல நேரிட்டது. புதியக் கொள்கையுடன் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ள எமக்கு மக்களும் ஆதரவு வழங்க வேண்டும்.

பச்சை, நீலம், சிவப்பு என ஒரே கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல் மக்கள் எமக்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். நான் 2006ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். அப்போதிருந்தே பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறேன்.

அந்த சவால்களுக்கு வெற்றிகரமாகவும் நான் முகம் கொடுத்திருந்தேன். இதனால்தான் நான் அரசியலுக்கு வருவதை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வேட்பு மனுவை நிராகரிக்க மனுத்தாக்கல் செய்தமை எல்லாம் இதனால்தான். இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. எனக்கு யாரும் சவால் கிடையாது. மாறாக நான் தான் பலருக்கு சவாலாக உள்ளேன் என்பது தெரிகிறது” என்றார்.