ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது: விசேட வர்த்தமானி வெளியானது

0
89

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று காலை (26) வெளியிட்டது.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும் இது தொடர்பான வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜகிரிய சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் அடுத்த மாதம் 14ம் திகதி வரை சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை கட்டுப்பணத்தை டெபாசிட் செய்யலாம்.

ஒகஸ்ட் 14ஆம் திகதி மதியம் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளராக இருக்கும் ஒருவர் ​50,000 ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

வேட்பாளர் வேறொரு அரசியல் கட்சியால் அல்லது வாக்காளரால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக இருக்கும் போது 75,000 ரூபாய் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் அதிகாரத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.