இணையதளம் ஊடாக நச்சுப்பொருள் விற்பனை; 129 பேரின் மரணத்திற்கு காரணமான கனடியர்

0
48

கனடிய பிரஜை ஒருவரினால் இணைய தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட நச்சுப் பொருட்களின் மூலம் இதுவரையில் 129 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நியூசிலாந்தில் இடம் பெற்ற நான்கு தற்கொலை சம்பவங்களுடன் குறித்த கனடியருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் மிஸிஸாகா பகுதியைச் சேர்ந்த கெனத் லோவ் என்ற நபர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் நச்சுப் பொருட்களை அனுப்பி தற்கொலை செய்து கொள்ள உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நியூஸிலாந்தில் நான்கு பேர் குறித்த நபரிடம் உதவி பெற்றுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் தற்கொலை செய்வதற்கு தேவையான நச்சுப் பொருட்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி கெனத்திடம், நச்சுப் பொருட்களை கொள்வனவு செய்து உலக அளவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.

நியூசிலாந்தில் உயிரிழந்தவர்களில் 18 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய வழியில் தொடர்பு கொண்டு இவ்வாறு நச்சு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கெனத் என்பவர் இவ்வாறு பலரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாகவும் நேரடியாக கொலை செய்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு எதிராக கனடாவில் 14 நேரடி கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.