“கனேடியத் தமிழர் பேரவை தகுதி இழந்துவிட்டது”: அனைத்துத் தொடர்புகளையும் நிறுத்த அழைப்பு

0
42

கனேடியத் தமிழர் பேரவை (CTC) உடனான அனைத்துத் தொடர்புகளையும் நிறுத்துமாறு, கனேடியத் தமிழர் கூட்டு கோரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஈழம் முதல் கனடாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழர்கள், கனேடியத் தமிழர் பேரவையில் நம்பிக்கை இழந்துவிட்டனர்! பொறுப்புக்கூறல், ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, சட்ட நியமங்களின் அடிப்படையிலான நிர்வாகம் ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளுடன் கனேடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் கனேடியத் தமிழர் பேரவை (“CTC”) தொடர்ந்து தோல்வியடைந்திருப்பதை கனேடியத் தமிழர் கூட்டு (“கூட்டு”) வெளிப்படையாகக் கண்டிக்கிறது.

கனடாவில் சிவில் சமூகம் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களினாலும், தமிழ் இனப்படுகொலை பரவலாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், CTC கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அதனை அப்பட்டமான மௌனத்துடன் மறுத்து வந்துள்ளது.

தமிழ்ச் சமூகம், கூட்டு ஆகியவற்றின் தொடர் அழுத்தத்தின் பின்னர், CTC அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம், தமிழ் இனப்படுகொலையை ஒற்றை வரியில் ஏற்றுக்கொண்ட போதிலும், அது போதுமானதாக இல்லை.

இது ஈழத்தமிழர்களின் கோட்பாடுகளுக்கான நேர்மையான வாதத்தையோ அல்லது நீண்டகால அர்ப்பணிப்புக்கான உத்தரவாதத்தையோ வழங்கவில்லை.

மேலும், இமயமலைப் பிரகடனத்தில் CTCயின் அவமானகரமான ஈடுபாடு, நீதியைப் பெறுவதில் சர்வதேச ரீதியான பரப்புரை முயற்சிகளின் முன்னேற்றத்தை நாசம் செய்துள்ளது.

CTCயின் நகர்வுகள் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் உட்பட ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் வரலாற்று அநீதிகளை மூடிமறைக்க இலங்கை அரசாங்கத்திற்கு உதவுகிறது.

CTC திட்டமிட்டோ அல்லது திட்டமிடாமலோ இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுடன் தன்னைத் திறம்பட இணைந்துள்ளது. இமயமலைப் பிரகடனத்தில் பேரவையின் பங்கேற்பு, இலங்கையின் போர்க் குற்றவாளியும், கனடாவால் தடை செய்யப்பட்டவருமான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபசவுடன் ஒளிப்படம் எடுத்ததன் மூலம், மேலும் மோசமடைந்தது.

பேரவையின் முன்னாள் தலைவர் ரவீனா ராஜசிங்கத்தின் ஆதரவுடன் குறித்த சந்திப்பு நடத்தப்பட்பட்டமையும், அச்சந்திப்பையும், அதனுடன் தொடர்புடைய ஒளிப்படப் பிடிப்பையும் நியாயப்படுத்தும் கருத்துக்களையும் அவர் (ரவீனா) பின்னர் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில், புதிய தலைவர், இயக்குனர் குழு நியமிக்கப்பட்டது. இந்த செயல்முறை வெளிப்படைத்தன்மை அற்ற, குறித்த அமைப்பின் எதேச்சாதிகாரத் தன்மையின் உச்சநிலையை அம்பலப்படுத்தியது.

இது பெயருக்கு மட்டுமான “தேர்தல்” என்பதால், இது செயற்பாட்டு ரீதியான நியமனம் மட்டுமே என்பதே உண்மையாகும். இந்த நியமனம் பழைய முகங்களைப் புதிய பதவி நிலைகளுக்குக் கொண்டுவந்துள்ளது – அது மாற்றத்தைக் குறிக்கும் முகப்பு மாற்ற சமிக்ஞை மட்டுமே.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள், இந்த அமைப்பிற்குள் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதோடு, அமைப்பின் இன்றைய மோசமான நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களும் ஆகும்.

ஈழத் தமிழர்களுக்குப் பாதகமான இந்த அமைப்பின் எதேச்சதிகார நடவடிக்கையை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். அவர்கள் பிரச்சினையின் தீர்வாக இல்லாமல் – அதன் ஒரு பகுதியாக உள்ளனர்.

CTC தொடர்ந்து தவறான திசையில் பயணிக்கிறது. சீர்திருத்தம் குறித்த எந்த நம்பிக்கையும் சமீபத்தில் சிதைந்துவிட்டது. ஈழத் தமிழர்களின் நலனுக்காக இந்த அமைப்பைச் சீர்திருத்துவதற்கான எண்ணம், ஊக்கம், தயார்நிலை ஆகியவை CTC யிடம் இல்லை என்பதைக் கூட்டுடன் நடத்திய நேரடி சந்திப்பு தெளிவுபடுத்திவிட்டது.

இன்றைய போக்கு நிலையில், இலங்கை அரசாங்கத்துடனான அனைத்துத் தொடர்பாடல்கள், ஈடுபாடுகள் குறித்த விபரங்களை ஆழமான ஆய்வுக்குட்படுத்தும் நோக்கில், முழுமையாக வெளிப்படுத்துவது CTC க்கு கட்டாயமானதாகும்.

ஈழத் தமிழர்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வழிகளில், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணுவதில் பேரவை தொடர்ந்து ஆதரவான ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

கூட்டு மற்றும் சமூகத்தின் ஒற்றுமையான முயற்சிகள் காரணமாக, CTCயில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதில் மிகவும் சர்ச்சைக்குரிய உலகத் தமிழர் பேரவையில் இருந்து CTC விலகியதும் அடங்குகிறது.

இருப்பினும், பேரவை எடுத்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. இந்தத் தருணத்தில் கனேடியத் தமிழர்கள் CTC மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டனர்.

தமது கோரிக்கைகளை வலுப்படுத்துமாறும், மாற்றத்திற்கான பரப்புரைகளை தொடருமாறும் நாங்கள் சமூகத்தை வலியுறுத்துகின்றோம். எங்கள் சமூகத்தின் நம்பிக்கையை CTC தொடர்ந்து மீறிவருகிறது. சமூகம் CTCயை மீளவும் தமது கட்டுப்பாட்டில் எடுப்பது காட்டாயமானதாகும்.

கனேடியத் தமிழர்களுக்கும், CTCக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பற்ற இடைவெளியை மாநகர, மாகாண, மத்திய அரசாங்கங்கள் அங்கீகரிக்க வேண்டும் எனக் கூட்டு கோரிக்கை விடுக்கிறது.

தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது ‘தமிழர் விழா’வை (TAMIL FEST) நடத்தவோ, CTCக்கு இனியும் தார்மீக அதிகாரம் இல்லை. மேலும் தேர்தல்கள் அரங்கேற்றப்பட்டு உறுப்பினர் சேர்க்கைக்குத் தடை விதித்துள்ள குறித்த அமைப்பு என்ன சட்ட அதிகாரத்தை கொண்டுள்ளது என்பது கேள்விக்குரியது.

இது ஒன்ராறியோவில் 2010ஆம் ஆண்டின், சட்ட நியமங்களின் அடிப்படையிலான நிர்வாகம் மற்றும் இலாப நோக்கற்ற கூட்டு நிறுவனங்கள் குறித்த சட்டம் ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கு முரணானதாகும்.

பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கிறது:

‘தமிழர் விழா’வை (TAMIL FEST) சமூகத்தின் நலன்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்றிடம் ரொறன்ரோ நகரம் கையளிக்கவேண்டும். தமிழர்கள் ‘தமிழர் விழா’வை மீளவும் தமது கட்டுப்பாட்டில் எடுக்கும் நேரம் வந்துவிட்டது.

‘தமிழ் இருக்கை’ என்ற திட்டத்தைத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புடன் இணைந்து ரொறன்ரோ பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

CTC உடனான சமூகத்தின் பிரச்சனைகளை அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களும், ரொறன்ரோ பல்கலைக்கழகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். CTC யின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதால், அது தொடர்ந்தும் இப்பாதையில் பயணிக்க முடியாது.

ஜூலை 31, 2024க்குள் சீர்திருத்தம் நோக்கிய குறிப்பிடத்தக்க, அர்த்தமுள்ள நடவடிக்கை எதனையும் CTC எடுக்காவிட்டால், பொறுப்புக்கூறல், ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, சட்ட நியமங்களின் அடிப்படையிலான நிர்வாகம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் முகமாக கணிசமான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வரை, CTC உடனான அனைத்துத் தொடர்புகளையும் நிறுத்துமாறு, ரொறன்ரோ நகரம், ஒன்ராறியோ அரசாங்கம், கனேடிய அரசாங்கம், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு கூட்டு அழைப்பு விடுக்கிறது.