பாலஸ்தீனத்தை தனிநாடாக மற்றொரு ஐரோப்பிய நாடான சுலோவேனியா அங்கீகாரம் அளித்துள்ளது. பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்க சுலோவேனியா அரசாங்கம் முடிவு செய்து பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க நடத்திய வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.
இது குறித்து சுலோவேனியா பிரதமர் ராபர்ட் கோலோப் ( Robert Golob) கூறுகையில்,
“இன்றைய பாலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாக அங்கீகரிப்பது மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது” என்றார்.
இந்த வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சியான ஸ்லோவேனியன் ஜனநாயகக் கட்சி ஆட்சேபனை தெரிவித்து இருந்தது. சுதந்திர பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்றும், இந்த நடவடிக்கை ஹமாஸ் அமைப்புக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்றும் தெரிவித்து வாக்கெடுப்பை புறக்கணித்ததாகவும் கூறினார்.
அதேவேளை ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களில் சுவீடன், சைப்ரஸ், ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. மேலும் இதே போல் மால்டா நாடும் அதை விரைவில் பின்பற்றலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.