இலங்கைக்கு ஒரு மாற்றம் அவசியமா; அரசியல் தொடர்பில் வைரலாகி வரும் சமூக வலைதள பதிவு!

0
103

இலங்கையின் அரசியல் மற்றும் தேர்த்தல் குறித்து நாட்டில் என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் பொது மக்களுக்காக இலங்கைக்கு ஒரு மாற்றம் அவசியமா என சமூக வலைத்தளத்தில் நெடிசன்களின் கூறி வரும் கருத்துக்கள் மிக வேகமாக பரவி வருகின்றது. இலங்கை அரசியல் தொடர்பாக நெடிசன்கள் மேலும் கூறுகையில்,

பொதுவாக 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வருவது அரசியல் சட்டத்தில் ஒரு வரை முறையாக உள்ளது. அது இலங்கை அரசியலின் தேர்தல் யாப்பின் முறையாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் ஒட்டுமொத்த முறையே மாறி உள்ளது.

அரகலய காலத்தில் கடந்த ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு ஓடும் போது அரசை பொறுப்பேற்க எவருமே முன்வரவில்லை வீதிகளில் மக்கள் எரிபொருளுக்காகவும் உணவுகளுக்காகவும் முண்டியடித்துக் கொண்டு காலத்தை கழித்ததை நாம் மறக்க முடியாது.

ஆனால் அந்த துயரக் காலத்தை தற்போது அனேகர் மறந்து போனதாகவே தெரிகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே தேர்வு செய்யப்படாத ஒரு கட்சியிலிருந்து வந்த நியமன அங்கத்தவரான ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை பொறுப்பேற்று மக்கள் பட்ட துன்பங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கக்கூடிய நிலைக்கு மாற்றி இன்றைய கியூ அற்ற வாழ்க்கைக்கு கொண்டு வந்து உள்ளதை எவரும் மறக்க முடியாது.

பொதுவாக இலங்கையில் ஐந்து வருடங்களுக்கு அல்லது பத்து வருடங்களுக்குள் ஒரு கட்சி என இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

இதில் என்ன ஒரு சோகம் என்றால் ஒரு கட்சி கொண்டுவரும் திட்டத்தை அடுத்த கட்சி ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும்போது அதை தொடர்ந்ததே இல்லை.

அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி, முதலில் வந்த கட்சி கொண்டு வந்த திட்டங்களை தூக்கி எறிந்து விட்டு புதிய திட்டங்களை கொண்டு வரும். அடுத்த ஐந்து வருடங்களில் முதலில் ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் பதவிக்கு வரும். அவர்கள் செய்வதும் முன்னே ஆட்சியினர் செய்த அதே செயல்பாட்டைத்தான்.

அவர்களும் முதலில் இருந்த கட்சியினர் கொண்டு வந்த திட்டங்களை தூக்கி எறிந்து விட்டு இன்னொரு திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து வைக்கும்.

இது ஒரு சிறுபிள்ளைத்தனமான அரசியல் என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் மக்கள் மீண்டும் மாறி மாறி இரு கட்சிகளுக்கு வாக்களிப்பது பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது.

சில கட்சிகள் உடைந்து புதிய பெயர்களில் வந்தாலும் அல்லது கூட்டணியாகி வந்தாலும் எல்லோரும் ஒரே விதமான நோயாளிகள் தான். இவர்கள் மாறியதே இல்லை.

தற்போது இலங்கை உள்ள நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ரணில், மஹிந்த ராஜபக்ஷ அவர்களது கட்சியினரின் ஆதரவோடு ஆட்சியை நடத்தி வருகிறார்.

அதற்கும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கும் சம்பந்தமே இல்லை. ரணிலுக்கு செய்ய வேறு வழியும் இல்லை. எதிரான கொள்கையுடைய ராஜபக்ஷ கட்சியின் ஆதரவில் அவர் ஆட்சி செய்கிறார்.

ரணிலுக்கு இருக்கும் ஒரே ஒரு பலம் அவருக்கு உள்ள ஜனாதிபதி என்ற அந்தஸ்து மட்டுமே. அதனால் தான் அவர் நினைத்ததில் அல்லது நினைப்பதில் பாதியையாவது செய்ய முடிகிறது.

ராஜபக்ஷ ஆதரவு உறுப்பினர்களுக்கு அவரை விட்டால் வேறு வழியும் இல்லை. எனவே அவர்களும் 100% மன ஒப்புதல் இல்லாமல் ரணிலுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

இதனால் மஹிந்த தரப்பினர் மகிழ்ச்சி அடைவதில்லை. மகிழ்ச்சி அடைய முடியாது. தங்களது பலத்தை இன்னொருவருக்கு கொடுத்துவிட்டு முடங்கி கிடப்பதை எவராலும் ஏற்க முடியாதுதான்.

ஆனால் நாட்டை விட்டு ஓடி கடலிலும், வெளிநாடுகளிலும் நின்றவர்கள் இன்று நாட்டிலாவது இருக்க கிடைத்திருப்பது ரணில் ஜனாதிபதி பதவியில் இருப்பதால்தான்.

ரணில் பின்பற்றும் லிபரல் எண்ணங்கள் அவர்களுக்கு புகலிடம் அளித்துள்ளது. ஏனையோர் இருந்திருந்தால் சில நேரம் இவர்களுக்கு வேறு துயரங்கள் நடந்திருக்கும்.

வெளிநாடுகளும் இவர்களை ஏற்காமல் இலங்கையிலும் இவர்களுக்கு இருக்க முடியாமல் இருந்திருந்தால் இவர்களது நிலை என்னவாகி இருக்கும் என்பது இன்றும் சொல்ல முடியாத ஒரு காரணமாகவே இருக்கிறது ரணிலிடம் சில நல்ல திட்டங்கள் உள்ளன. ஆனால் ரணிலுக்கு மக்களின் ஆதரவும் இல்லை. கட்சிக்கு போதுமான பலமும் இல்லை.

அதனால் தான் ரணிலால் ஜனாதிபதி ஆகவே முடியாது இருந்தது. இது ஏதோ அதிர்ஷ்டத்தில் வந்து வாய்த்த ஒரு ஜனாதிபதி பதவி. இது ஒரு குருட்டு அதிஸ்ட்டம் எனத்தான் சொல்லலாம். அவரே எதிர்பார்க்காததாக இருக்கலாம்.

அதை வைத்து ரணிலுக்கு இருந்த வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் அரசியல் ஞானம் ஆகியவற்றை வைத்து நரித்தனமாக நாட்டை மீட்டுள்ளார் என்று தான் நாம் சொல்ல வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. மொக்கர்களால் அரசியல் செய்ய முடியாது.

வாயுள்ள அனைவராலும் வைகுண்டம் போக முடியாது. உலகில் உள்ள எதிரும் புதிரும் ஆன எல்லா நாடுகளுக்கும் ரணில் நட்பு கரம் நீட்டி உள்ளார். அனைவரையும் வளைத்துப் போட்டுள்ளார். அதனால்தான் இலங்கைக்கு உதவிகள் கிடைக்கின்றன. அப்படி இல்லாது இருந்தால் எந்த உதவியும் இலங்கைக்கு கிடைத்திருக்காது. இந்த உதவிகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று மக்கள் பஞ்சத்தால் கொத்து கொத்தாக மடிந்திருப்பார்கள்.

எல்லோராலும் போராடலாம் எல்லோரும் ஆட்சிக்கு வரலாம் ஆனால் மக்களை காப்பாற்ற அரசியல் சாணக்கியம் தேவை. அதேபோல் நாட்டுக்கு எது தேவையோ அதை புரிந்து கொள்ளும் சிந்தனையும் தேவை. அரசியல் என்பது கட்டபஞ்சாயத்து அல்ல. வெளியில் நின்று நாலு பேரை வசைபாடலாம். இனவாதம் பேசலாம். உணர்ச்சி வசப்படுத்தலாம். கனவு காணலாம். மதவாதம் பேசலாம். பிரிவினை பேசலாம். பதவிக்கு வந்தால் நினைத்த மாதிரி தலையைக் கூட திருப்ப முடியாது. பண்டாரநாயக்கவுக்கு அதுதான் நடந்தது.

வெளியே பேசிய உணர்ச்சி வார்த்தைகளால் வெல்ல முடிந்தது. பதவியை பெற்ற பின் சொன்னதை எல்லாம் செய்ய முடியவில்லை. கடைசியில் கொண்டு வந்தவர்களே பண்டாரநாயக்கவை கொன்று போட்டார்கள். இதுபோல இலங்கை அரசியலில் அநேக சம்பவங்களைக் காட்டலாம். ஆனால் நாடு செழிப்புர மக்களுக்கு என்ன தேவை என உணரும் தலைவன் ஒருவன் தேவை. அது இலகுவானது அல்ல. சிலவற்றை மென்மையாக செய்ய முடியாது. ஒன் மேன் ஷோவும் செய்ய முடியாது. மாமியார் மருமகள் சண்டை போல குற்றம் குறை சொல்லிக் கொண்டிருப்போரால் நல்லதொரு நாட்டை உருவாக்க முடியாது. பேசுவது போல் அனைவரையும் சிறையில் தள்ளவும் முடியாது. திருடியதையெல்லாம் சிறு பிள்ளைகள் போல பறித்து எடுக்கவும் முடியாது. இவை ஒரு குடும்பத்துக்குள் கூட முடியாது. ஆனால் சர்வதேசம் கவனிக்கும், அங்கீகரிக்கும் ஒரு அரசியலாக வெளியில் சொல்வதை எல்லாம் செய்ய முடியாது.

சிலர் யுத்தங்களை தான்தோன்றித்தனமாக செய்துவிட்டு மின்சார கதிரை பயத்தில் புலம்பி திரிந்தது அல்லது அதையே சொல்லி பதவியை தொடர்ந்தது அவர்கள் உலக அரசியல் தெரியாமல்தான். தமிழர்கள் மகிந்தவை மின்சார கதிரையில் உட்கார வைக்கலாமென பரப்புரை செய்தார்கள். அதேபோல மகிந்தவும் போரை வென்றதால் தன்னை மின்சார கதிரையில் தமிழர்கள் உட்கார வைக்க முயற்சி செய்கிறார்கள் என அடிமட்ட சிங்கள மக்களது ஆதரவை பெற பரப்புரை செய்தார். இது இரண்டுமே யதார்த்தம் அல்ல.

ஐநாவில் மின்சார கதிரையே இல்லை. ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் இல்லை. அப்படி இருக்கும்போது ஜெனிவாவில் எப்படி மின்சார கதிரையில் உட்கார வைக்கலாம்? ஜெனிவாவில் காலில்லா ஒரு நொண்டிக் கதிரைதான் பார்வைக்கு உள்ளது. இந்த மின்சார கதிரைக் கதை ஒரு பொய்யான பரப்புரை. இலங்கையில் இனி போராட்டங்கள் நடத்தி நாடு பிடிக்க முடியாது. அரகலய கூட நாடு பிடிக்க நடந்த போராட்டம் அல்ல. மக்களது விரக்தியின் வெளிப்பாடாக உருவானதே அரகலய போராட்டம்.

அந்த அமைதியான போராட்டத்தை சிதைத்தவர்கள் ஜேவிபியின்னர். ஆரம்பத்தில் அரகலய போராட்டக் களத்தை பார்த்த ஜேவிபி தலைவர்கள், அது ஒரு காணிவல் களியாட்ட நிகழ்ச்சி என எள்ளி நகையாடினர். அங்கே மக்கள் திரள ஆரம்பித்ததும் அதற்குள் ஊடுருவி தாங்களும் போராடுவதாக காட்டத் தலைப்பட்டனர். அங்கு பல சிறு சிறு குழுக்கள் அரகலய போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஜேவிபினர் வேறு எவரும் அங்கு நுழையக்கூடாது என்ற நிலையில் சஜித்த்தை தாக்கினர். இன்னொன்று பாராளுமன்றத்தை நோக்கி படை எடுத்து அங்கு நின்ற ராணுவ போலீசாருக்கு எதிராக அச்சுறுத்தல் செய்து, சிலரை தாக்கினர்.

அவர்களது நோக்கம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேவை இல்லை என துரத்திவிட்டு தாங்கள் பாராளுமன்றத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இது ஆரம்பகால ஜேவிபினரது புரட்சி கால எண்ணம் போலவே இருந்தது. அன்று ஆட்சியில் இருந்த , ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை, வீட்டுக்காவலில் வைத்து பாராளுமன்றத்தை கைப்பற்றுவதும், ரேடியோ சிலோனை கைப்பற்றி நாடு தங்கள் வசம் உள்ளது என அறிவிப்பதுமே அவர்களது அன்றைய அஜண்டாவாக இருந்தது. அதையே செய்ய முற்பட்டு அரகலயவை சிதைத்தார்கள். ஆனால் மக்களது உணர்வு நிறைந்த போராட்டத்தின் காரணமாக ராஜபக்சே தரப்பினருக்கு நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை வந்தது.

அப்போது கூட நாட்டை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை. அவர்கள் அந்நேரமும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். அதுவே ரணிலுக்கு வாய்ப்பானது. அப்படி இழுபறிப்படாமல் இருந்திருந்தால் சஜித் அல்லது அணுர நாட்டை அப்போதே பொறுப்பேற்றிருக்கலாம். நொந்து போன நாட்டை பொறுப்பேற்றால் தங்களால் நிமித்த முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் வெகு காலம் அவர்களாலும் நாடு இருந்த நிலையில் நிர்வகிக்க முடியாது. அவர்களால் ஆட்சியை தொடரவும் முடியாது. அவர்கள் ஒரு தேர்தலை எதிர் பார்த்தார்கள். தேர்தல் ஒன்றில் தாங்கள் வந்தால் ஐந்து வருடங்களுக்கு தங்களை வெளியேற்ற முடியாது.

எனவே பாதியில் உள்ள அவியலில் கை வைக்க அவர்கள் விரும்பவில்லை. அந்தப் பாதி அவியலில் கைவைத்தவர் ரணில். அவரால் வெகு காலம் நாட்டை கொண்டு செல்ல முடியாது என இவர்கள் நம்பினர். ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்ப வேண்டாம் என சொன்னவர்கள் ஜேவிபியினர். சஜித் வழமை போல பேசிக் கொண்டே இருந்தார். நாட்டு மக்களின் துயரம் அவர்களுக்கு பெரிதாக கண்ணில் படவில்லை. அவர்களது சுயநல அரசியல் பதவிகளே நோக்கமாக இருந்தன. அன்று கூட அனைவரும் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்க முன்வரவில்லை. எனவே ரணிலுக்கு , ராஜபக்ஷவினரது ஆதரவு இல்லாமல் ஆட்சியை நடத்த முடியாத நிலை உருவானது.

ஏனையோர் ரணிலோடு இணைந்து ஆட்சியை செய்ய முன்வந்திருந்தால் அவர்களின் ஒருவர் பிரதமராக மற்றும் அமைச்சர்களாக ஆகி அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கலாம். பரிதாபம் திருடர்களது ஆதரவோடு ரணில் ஆட்சி செய்ய வேண்டிய நிலையை உருவாக்கியதே அனுர மற்றும் சஜித் தரப்பினர்தான். இந்த தலை விதியை இவர்கள் மாற்றி இருக்க முடியும். அதற்கு அவர்கள் தயாராக இருக்கவே இல்லை.

அது கடந்து போன கதை. இனி நடக்கப் போகும் கதை, பாதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அத்தனை திட்டங்களும் வேறொருவர் ஜனாதிபதியாக வரும் போது தூக்கி குப்பையில் போடப்படும். புதிதாக வேறு விதமாக திட்டங்கள் உருவாகும். அவை வளர்ந்து மக்கள் அதை அனுபவிக்க சில வருடங்கள் எடுக்கும். சர்வதேச தொடர்புகளில் மாற்றங்கள் ஏற்படும். அனைவரும் ஆதரிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் ஆதரிக்கலாம், அதனால் ஒரு சிலரோடு பகைத்துக் கொள்ள வேண்டி வரும். சிலர் ஆரம்பித்த திட்டங்களை முடக்கி விட்டு திரும்பி போவார்கள்.

இதனால் ஏற்படும் லாபம் அல்லது நட்டம் குறித்து அரசியல்வாதிகள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் அடிமட்ட மக்கள் மீண்டும் வீதிக்கு வந்து முன்னே விட மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாவார்கள். வாகனத்தை செலுத்துபவன் அல்லது டிரைவர் நல்லவனா கெட்டவனா என்பதல்ல இன்றைய பிரச்சனை. மலையேறி போய்க்கொண்டிருக்கும் பயணத்தில் டிரைவரை இறக்கிவிட்டு வாகனமே செலுத்தாத ஒருவனிடம் வாகனத்தை கொடுத்தால் என்ன நடக்குமோ, அதுவே நாளைக்கு  இலங்கைக்கு நடக்கப் போகிறது. மாற்றம் தேவைதான். அது எப்போது தேவை என சிந்திக்க மக்களுக்கும் பொது அறிவு தேவை. வெறுப்பும் கோபமும் கண்ணை மறைக்கும். அது யதார்த்தம் அல்ல. தெளிவாக சிந்திப்பதும், சரியான முடிவு எடுப்பதும் மக்கள் கையிலேயே உள்ளது. வாழ்வதோ வீழ்வதோ நீங்கள்தான். அது புரிந்தால் போதும்.